| ADDED : ஜன 03, 2024 11:43 PM
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 352 வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், பயனாளிகளுக்கு விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோட்டில், சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில், ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது.இதன் அருகே தமிழக அரசின் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 31 கோடியே 39 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில், புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி 2020 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு கடந்த ஆண்டு முடிக்கப்பட்டது.ஏழு மாடிகளில் 352 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளுக்கும் மின்சார வசதிகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் பயனாளிகள் யாரும் அங்கு குடியிருக்க வரவில்லை. பயனாளிகளுக்கு விரைந்து ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ''சிக்கதாசம்பாளையம் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அண்மையில் 1,000த்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 60 பேருக்கு தகுதியின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் குடி அமர்த்தப்படுவார்கள். அனைத்து வீடுகளுக்கும் பயனாளிகள் விரைவில் தேர்வு செய்யப்படுவார்கள்,'' என்றார்.