தாவரவியல் பூங்கா சாலையில் பாதாள சாக்கடை பணி தாமதம்; வாகன ஓட்டிகள் தவிப்பு
ஊட்டி; ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில், பாதாள சாக்கடை பணி தாமதமாவதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா சாலையில், பாதாள சாக்கடையில் அடிக்கடி அடைப்பால் கழிவுநீர் சாலையில் வழிந்தோடி சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இச்சாலையை பொதுமக்கள், சுற்றுலா பயணியர் அதிகளவில் பயன்படுத்துவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. 'இங்குள்ள பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்ய வேண்டும்,' என, மக்கள் வலியுறுத்தினர். ஆய்வு மேற்கொண்ட நகராட்சி நிர்வாகம் அடைப்பை சரி செய்ய கடந்த சில நாட்களுக்கு முன்பு பொக்லைன் உதவியுடன், 50 மீட்டர் துாரத்துக்கு குழி தோண்டி சீரமைப்பு பணி மேற்கொண்டனர். கடந்த சில நாட்களாக எவ்வித பணியும் மேற்கொள்ளாமல் உள்ளனர். தோண்டி எடுக்கப்பட்டு மண் சாலையில் குவித்து வைத்திருப்பதால் பொதுமக்கள் நடந்து செல்ல இடையூறு ஏற்பட்டிருப்பதுடன், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. முக்கிய சாலையில் மேற்கொள்ளும் பணிகளை பல நாட்கள் இழுத்தடிப்பதால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, நகராட்சி நிர்வாகம் இப்பணிகளை விரைவில் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.