உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / 2.30 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு மாத்திரைகள்: இணை இயக்குனர் தகவல்

2.30 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு மாத்திரைகள்: இணை இயக்குனர் தகவல்

ஊட்டி; 'நீலகிரி மாவட்டத்தில், 2.30 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது,' என, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.குடல் புழுக்கள் மனித குடலில் காணப்படும் ஒட்டுண்ணிகள் ஆகும். இவை சிறு குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க கொடுக்கப்படும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்களால் வளர்கின்றன.இந்த உயிரினங்கள் புழுக்கள் நிறைந்த உணவு அல்லது கழிவுகளை தொடுவதன் மூலமாகவும் நம் உடலில் ஊடுருவுகின்றன. இப்படி உள்நுழையும் புழுக்கள் குடலுக்குள் சென்று பலவீனம், ரத்த சோகை, அஜீரணம், எடை இழப்பு, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி உள்ளிட்ட பல கோளாறுகளை ஏற்படுத்துகின்றன.

விழிப்புணர்வு பணிகள்

சில நேரங்களில் புழுக்கள் மூளைக்குள் கூட நுழையும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக, 1 முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் பிப்., 10ம் தேதி தேசிய குடற்புழு நீக்க தினம் நம் நாட்டில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊட்டி பிரீக்ஸ் பள்ளியில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணிகளை, கலெக்டர் லட்சுமி பவ்யா துவக்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு மாத்திரைகளை வழங்கினார்.சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராஜசேகரன் கூறுகையில், ''மாவட்டத்தில், 1 வயது முதல் 19 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகள்; 20 வயது முதல் 30 வயது வரை உள்ள கர்ப்பிணிகள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் அல்லாத பெண்கள்; பள்ளி செல்லா குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையத்திலும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது. அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார மையங்களிலும், பள்ளிகளிலும் மற்றும் கல்லுாரிகளில், 486 அங்கன்வாடி பணியாளர்கள், 216 கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் 416 ஆஷா பணியாளர்கள் மூலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் முன்னிலையில் நேரடியாக வழங்கப்படுகிறது. இதன் மூலம், 2.30 லட்சம் குழந்தைகள் மற்றும் 49 ஆயிரம் பேர் பயன் பெறுவர். இவ்வாறு, அவர் கூறினார்.அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி, இணை இயக்குனர் துணை இயக்குனர் சோமசுந்தரம், ஊட்டி நகர்நல அலுவலர் சிபி, ஊட்டி வட்டார மருத்துவ அலுவலர் ஆஷாகோசி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி