குறைவான நிலம் உள்ளவர் கட்டடம் கட்டுவதில் சிக்கல்; கிராசபை கூட்டத்தில் தகவல்
குன்னுார் : குன்னுார் உபதலை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமசபை கூட்டம் கரிமொரா ஹட்டி கிராமத்தில் நடந்தது.ஊராட்சி தலைவி பாக்கியலட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர், தாசில்தார் கனிசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்ரமணியம், துணை மண்டல தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கிராமத்தை சேர்ந்த விஜயகாந்த் பேசுகையில்,''உபதலை பஞ்சாயத்தில், 3,500 பட்டாக்களில் 90 சதவீதம், 3 சென்ட்க்கும் குறைவான நத்தம் நிலமாக உள்ளதால், ஒற்றைச்சாளர முறையில் கட்டட அனுமதியை ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாத நிலை ஓராண்டாக நீடித்து வருகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,'' என்றார். தொடர்ந்து, சின்ன பிக்கட்டி பகுதியில் குடிநீர் தொட்டி சுற்றி தரைத்தளம் அமைக்க வார்டு உறுப்பினர்களுக்கு தெரியாமல் டெண்டர் விட்டு பணிகள் நடந்தது தொடர்பான புகார்கள் எழுப்பப்பட்டன. இதற்கு சம்பந்தப்பட்ட இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.சிவராஜ் பேசுகையில், ''கரிமொரா ஹட்டியில், 2 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிப்பிட கால்வாய் கட்டப்படாமல் பணிகள் முடித்ததாக போர்டு வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கடந்த கிராம சபை கூட்டங்களில் தெரிவித்த போது ஆய்வு செய்வதாக கூறி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெயரளவிற்கு கூண்டு வைத்து கரடியை பிடிப்பதாக கூறும் வனத்துறை அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுகின்றனர்,'' என்றார்.அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை விடுத்தும், அதற்காக நடவடிக்கைகள் எடுக்காமல் மக்களை அலைகழிப்பதாகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டது. இந்த பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உறுதி அளித்தனர்.