மேலும் செய்திகள்
இ - பாஸ் திட்டம் தோல்வி ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
20 hour(s) ago
பந்தலூர் : பந்தலூர் தனியார் தேயிலை தோட்ட நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் வேலை புறக்கணிப்பில் ஈடுபட்டனர். பந்தலூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தோட்ட நிர்வாகத்தின் கீழ் 150க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், கடந்த மாதம் 11ம் தேதி எஸ்டேட்டில் சூப்பர்வைசராக பணியாற்றியவர் இறந்துவிட்டார். இறுதி சடங்குக்காக கலந்து கொள்ள அவரது உறவினர்கள் மற்றும் தொழிலாளர்கள் 53 பேர் வேலைக்கு செல்லாமல் விடுப்பு எடுத்தனர். அதேப்போல், கடந்த 1ம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 61 தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் விடுப்பு எடுத்திருந்தனர். இந்நிலையில், கடந்த 11 மற்றும் 1ம் தேதிகளில் எந்தவித முன்னறிவிப்பின்றி விடுப்பு எடுத்ததால், தமிழ்நாடு தோட்ட தொழிலாளர்களுக்கான கூட்டுநிலை ஆணைகளின் பிரிவு 20ன் கீழ் 2 தினங்களுக்கான சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக எஸ்டேட் நிர்வாகத்தின் சார்பில் முதல்கட்டமாக 53 பேருக்கும், 2ம் கட்டமாக 61 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த தொழிலாளர்கள் நேற்று காலை பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தாங்கள் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., ஆகியோர் தொழிற்சங்க பிரதிநிதிகள் மூலம் முறையான தகவல் கொடுத்து விடுப்பு எடுத்ததாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர். பகல் 1.00 மணி வரை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டும், வருவாய்த்துறை மற்றும் போலீசார் மட்டுமே சம்பவ இடத்துக்கு வந்திருந்தனர். எஸ்டேட் நிர்வாகம் சார்பில் யாரும் பங்கேற்க வராததால் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போராட்டம் குறித்து சி.ஐ.டி.யு., பொதுசெயலாளர் சுரேஷ், எஸ்டேட் பொதுமேலாளர் மகேஷ்நாயரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பொதுமேலாளர் பேச்சுவார்த்தைக்கு மறுப்பு தெரிவித்ததால், அதனை தொடர்ந்து எஸ்டேட் நிர்வாகம், தொழிற்சங்கங்கள் சார்பில் பேச்சுவார்த்தை நடந்தும் தீர்வுக்காணப்படாததால் வரும் 15ம் தேதி தொழிலாளர் நல ஆணையாளர் முன்பாக பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
20 hour(s) ago