குன்னூர் : ''வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் பெருமையையும், பணிபுரியும்
பிரிவின் புகழையும் பேணி பாதுகாப்பது, இளைய வீரர்களின் பொறுப்பு,'' என,
வெலிங்டன் எம்.ஆர்.சி., ராணுவ அதிகாரி ஜாதவ் கூறினார்.நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி., ராணுவ பயிற்சி முகாமில்,
தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு
ராணுவப் பயிற்சி வழங்கப்படுகிறது. போர் களத்தில் பணிபுரியும்
வீரர்களுக்குரிய அனைத்துப் பயிற்சிகளும் இங்கு வழங்கப்படுகின்றன. ஓராண்டு
பயிற்சி முடித்த ராணுவ வீரர்களை, நாட்டை காக்கும் பணிக்கு அனுப்பி வைக்கும்
நிகழ்ச்சி, பேரக்ஸ் எம்.ஆர்.சி., சதுக்கத்தில் நடந்தது. பயிற்சி முடித்த
355 ராணுவ வீரர்கள், ராணுவ பாண்டு, வாத்திய இசைக்கு மத்தியில், மைதானத்தில்
அணிவகுத்து நின்றனர். தேசியக் கொடியும், எம்.ஆர்.சி., ராணுவக் கொடியும்,
அடுத்தடுத்து ராணுவ மரியாதையுடன் மைதானத்துக்கு எடுத்து வரப்பட்ட போது,
ராணுவ அதிகாரிகள் 'சல்யூட்' அடித்தும், மக்கள் எழுந்து நின்றும் மரியாதை
செலுத்தினர். பகவத் கீதை, பைபிள், குரான் மீது, ராணுவ வீரர்கள் சத்தியப்
பிரமாணம் செய்து கொண்டனர். 'தேசத்தை காக்கும் பணியில், தரை, ஆகாயம், கடல்
மார்க்கம் என எந்த சூழ்நிலையிலும் பணி செய்ய தயங்க மாட்டேன்;
உயரதிகாரிகளின் அறிவுரைக்கு தலைவணங்கி, கட்டுப்பட்டு செயல்படுவேன்' என
உரத்த குரலில், உணர்வுப் பூர்வமாக உறுதிமொழி ஏற்றனர். அணிவகுப்பு மரியாதையை
ஏற்றுக் கொண்ட எம்.ஆர்.சி., கமாண்டன்ட்.பிரிகேடியர் ஜாதவ் பேசுகையில்,
''நாட்டை காக்கும் பல போர்களில், வீர மரணம் அடைந்த, உயிருடன் உள்ள
வீரர்களின் செயல்களை பாராட்டி, விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ராணுவத்தில் தியாக மனப்பான்மையுடன் சேவை செய்த வீரர்களின் பெருமையை,
பயிற்சி பெற்று படைகளத்துக்கு செல்லும் வீரர்கள் நிலை நாட்ட வேண்டும்,''
என்றார். பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட கிரண், ரமேஷ், சந்தோஷா, ராஜேஷ்,
பரசுராம், ராஜகோபால், ராகதீப், ராம்கி, படை கமாண்டர் லெபானுக்கு, சிறந்த
சிப்பாய்க்கான பதக்கத்தை, கமாண்டன்ட். ஜாதவ் அணிவித்தார். ராணுவ
அதிகாரிகள், பொதுமக்கள் பலர், இந்த உணர்வுப் பூர்வமான நிகழ்ச்சியை கண்டு
ரசித்தனர்.