நோய் பரப்பும் குடிநீர்: பழங்குடியின மக்கள் பாதிப்பு
பந்தலுார் : பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட, 9-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் குழிவயல் பழங்குடியின கிராமம் அமைந்துள்ளது. 12 குடும்பத்தினர் இங்கு வசித்து வரும் நிலையில், குடிநீர் வசதி இல்லாமல், பாதிக்கப்பட்டதுடன் கிராமத்தை ஒட்டி, 500 மீட்டர் தொலைவில் உள்ள தாழ்வான பகுதியில் இருந்து குடிநீர் சுமந்து வந்து பயன்படுத்தி வந்தனர்.இதுகுறித்து,'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. தொடர்ந்து, ஊராட்சி மூலம், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், 3.52 லட்சம் ரூபாய் செலவில் நீர்த்தேக்க தொட்டி மற்றும் குடிநீர் குழாய்கள் பொருத்தப்பட்டது.ஆனால், சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் கிணறு அமைக்கப்படவில்லை. ஏற்கனவே உள்ள கிணறு பாழடைந்த நிலையில் உள்ளதுடன், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த தண்ணீர் சேறு கலந்தும், எண்ணை மிதப்பது போன்றும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இதனால், நீர்த்தேக்க தொட்டி மற்றும் தண்ணீர் பிடித்து வைக்கும் பாத்திரங்கள் நிறம் மாறி வருகிறது. இதனை குடிக்க பயன்படுத்த முடியாத நிலையில், மழை நீரை நம்பி பழங்குடி மக்கள் உள்ளனர்.கிராமத்தை சேர்ந்த வாசு என்பவர் கூறுகையில், ''கிராமத்தை ஒட்டி யானை மற்றும் புலி நடமாடும் நிலையில், நடந்து சென்று குடிநீரை சுமந்து வருவது இயலாத காரியமாக உள்ளது. இந்நிலையில் சேறு கலந்த துர்நாற்றம் வீசும் தண்ணீர் வினியோகம் செய்வதால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே, அதிகாரிகள் சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.