கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம்
பந்தலுார் : பந்தலுார் அருகே பிதர்காடு ஸ்கூல் மட்டம் பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் துவக்கப்பட்டது. பந்தலுார் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிதர்காடு ஸ்கூல் மட்டம் பகுதி அமைந்துள்ளது. இங்கு, 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ள நிலையில், குடிநீர் வினியோகம் செய்யும் கிணற்றில் மோட்டார் பழுதடைந்து, 13 நாட்களாக, குடிநீர் வினியோகம் செய்யாமல் நிறுத்தப்பட்டது. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், வார்டு உறுப்பினர் அனிதா தலைமையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். இதுகுறித்து, கடந்த, 9-ம் தேதி 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, ஊராட்சி மன்ற தலைவர் டெர்மிளா, ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, உடனடியாக கிணற்றில் புதிய மோட்டார் பொருத்தி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுத்தனர். மக்கள் நிம்மதி அடைந்தனர்.