இயற்கையோடு இணைந்த தீபாவளி அவசியம்; பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ஊட்டி : ஊட்டி புனித தெரேசன்னை உயர்நிலைப் பள்ளியில், இயற்கையோடு இணைந்து தீபாவளியை கொண்டாடும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.தேசிய பசுமை படை சார்பில், நீலகிரி மாவட்ட சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு நடந்த இந்நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் கிங்ஸ்டன் பேசுகையில், ''சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும். அந்த மனநிலை, மாணவர்கள் மத்தியில் இருக்க வேண்டும். நீர்நிலைகளில் பட்டாசு கழிவுகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும்,'' என்றார்.பயிற்சி ஆசிரியர் ஹேமா பேசுகையில், ''நோயாளிகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பின் முக்கியத்துவம் உணர்ந்து, வீட்டிற்குள் எந்த வகையான பட்டாசுகளையும் வெடிக்க கூடாது,'' என்றார். தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ், சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், ''வனப்பகுதிகளில் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால், பறவைகள், விலங்குகள் அதிர்ச்சி அடைந்து இடம் பெயருவது தொடர்கிறது.தங்கும் விடுதிகளில், தீபாவளியை வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வான வேடிக்கை பட்டாசுகள் வெடித்து இரவு நேரத்தில் கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும்.சிட்டு குருவிகள் மற்றும் வளர்ப்பு பிராணிகளின் நலன் கருதி, அதிக ஒலி மற்றும் மாசு உருவாக்கும் பட்டாசுகளை தவிர்ப்பது நல்லது,'' என்றார். தேசிய பசுமை படை பொறுப்பாசிரியர் ஷீலா நன்றி கூறினார். பள்ளி ஆசிரியர்கள் ஜெசந்தா செல்வி, பசுமைப்படை ஆசிரியர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.