பூங்கா அருகே சிறுத்தைக்கு இரையாகும் நாய்கள்; 2 இடத்தில் கேமரா வைத்து கண்காணிப்பு இரண்டு இடத்தில் கேமரா வைத்து கண்காணிப்பு
ஊட்டி; ஊட்டி தாவரவியல் பூங்கா அருகே, கிளன்ராக் பகுதியில் சிறுத்தையை பிடிக்க இரண்டு இடத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள கிளன்ராக் பகுதியில் ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர். சமீப காலமாக இரவு நேரத்தில் உலாவும் சிறுத்தைகள், வளர்ப்பு நாய்களை கொன்று கவ்வி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பால் என்பவரின் வீட்டு வளாகத்தில் நுழைந்த சிறுத்தை, ஜெர்மன் ஷெப்பர்டு நாயை கவ்வி சென்றது. இப்பகுதியில் தாவரவியல் பூங்கா, சர்வதேச ஆங்கில பள்ளி இருப்பதால்அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்து உள்ளனர். விசாரணையில், கடந்த இரண்டு மாதங்களில் இங்கு, 8 வளர்ப்பு நாய்களை சிறுத்தை கவ்வி சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறுகையில், ''ஊட்டி கிளன்ராக் பகுதியில் அடிக்கடி சிறுத்தை நடமாடுவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நாய் களை பிடிக்கும் சிறுத்தையை பிடிக்க இரண்டு இடத்தில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்,'' என்றார். * குன்னுார் அருவங்காடு ஜெகதளா, காரக்கொரை ஜங்ஷன் அருகே, நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:15 மணியளவில் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை ஒன்று ஓய்வு எடுத்து வருவதை காரில் செல்பவர்கள் பார்த்துள்ளனர். அங்கு குடியிருப்பு உள்ளதால், வனத்துறை கண்காணிக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.