மழையை எதிர்கொள்ள தோட்டங்களில் வடிகால் வசதி; தோட்டக்கலைத்துறை அறிவுரை
ஊட்டி : 'வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் தோட்டங்களில் அதிக நீர் தேங்காத வண்ணம் உரிய வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்,' என, தோட்டக்கலை அறிவுறுத்தியுள்ளது.நீலகிரியில் ஏப்., முதல் ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை, அக்., நவ., மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்கிறது. தற்போது தென்மேற்கு பருவமழை முடிந்து வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. வடகிழக்கு பருவமழையின் போது நீலகிரி விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தோட்டக்கலைத் துறை இணை இயக்குனர் ஷிபிலா மேரி கூறியதாவது:-வடகிழக்கு பருவமழை காலத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கான ஆயத்த நிலை ஏற்பாடுகளில் பசுமைக்குடில்களை பொறுத்தவரை பசுமைக்குடிலின் அடிப்பாகத்தை பலமாக நிலத்துடன் இணைப்பு கம்பிகளால் இணைக்க வேண்டும். கதவுகள் மற்றும் ஜன்னல்கள் பத்திரமாக மூடி உள்பகுதியில் காற்று உட்புகாமல் பாதுகாக்க வேண்டும். அருகில் மரங்கள் இருப்பின் அதன் கிளைகளை வெட்டவேண்டும்.பல்லாண்டு பயிர்களான, மா, பலா, கொய்யா, எலுமிச்சை, கிராம்பு, ஜாதிக்காயில் காய்ந்த கிளைகளை அகற்றி, மரங்களின் எடையை குறைக்கும் வகையில் கிளைகளை வெட்ட வேண்டும். தோட்டத்தில் தேவையான வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். நோய் தடுப்பு மருந்துகள் வேர் பகுதியில் நனையும்படி தெளிக்க வேண்டும். இளம் செடிகள் காற்றினால் பாதிக்காவண்ணம் தாங்கு குச்சிகள் கொண்டு கட்ட வேண்டும்.மிளகு பயிரில் உரிய வடிகால் வசதி செய்து, 'டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் சூடோமோனாஸ்' பூஞ்சாண உயிரியல் கொல்லி மருந்துகளை வேர் பகுதியில் இட்டு நோய் வராமல் தடுக்கலாம். வழிமுறைகள்
தோட்டக்கலை பயிர்களான வாழை, முட்டைகோஸ், பூண்டு, இஞ்சி, உருளைகிழங்கு, கேரட் போன்ற பயிர்களுக்கு தோட்டங்களில் அதிக நீர் தேங்காத வண்ணம் உரிய வடிகால் வசதி செய்து நீர்ப்பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.மேலும், காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க காற்று வீசும் திசைக்கு எதிர்திசையில் குச்சிகளால் முட்டுகொடுத்து புதியதாக நடவு செய்த செடிகள் சாயாவண்ணம் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் வயல்களில் தேவையான பயிர் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.