இ-பாஸ் ஆய்வு பணியாளர்களால் வாகன ஓட்டுனர்கள் குழப்பம்
பந்தலுார்; '--இ-பாஸ் ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும்,' என, வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தி உள்ளனர்.கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து, நீலகிரிக்குள் வரும் அனைத்து வாகனங்களும் இ--பாஸ் அனுமதி பெற்று நுழைய வேண்டும் என்ற விதிமுறை நடைமுறையில் உள்ளது.இதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்னர், வாகன அசல் பதிவுசான்று; காப்பு சான்று மற்றும் நடப்பில் உள்ள புகை சான்று ஆகியவற்றுடன், ஊட்டியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகியும், ஆன்லைன் மூலமும் அனுமதி பெற வேண்டிய சூழல் இருந்தது.தற்போது, இதனை ஆய்வு செய்வதற்காக பர்லியார், மேல் கூடலுார், மசினகுடி ஆகிய பகுதிகளில் 'பூம் பேரியர்' மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்தப் பணியில் உள்ளூர் போலீஸ் நிலைய போலீசார் மற்றும் பெண் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் போதிய பயிற்சிகளை வழங்காத நிலையில், பந்தலுார் மற்றும் கூடலுார் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, ஊட்டி அல்லது சமவெளி பகுதியில் செல்லும் வாகனங்களை, மேல் கூடலுார் பகுதியில் உள்ள சோதனை மையத்தில் நிறுத்தி, இ-பாஸ் பெற வேண்டும் என்ற வலியுறுத்தி உள்ளூர் ஓட்டுனர்களை குழப்பமடைய செய்கின்றனர்.மலை மாவட்ட நுழைவு வாயிலில், நீலகிரி மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்களை, அனுமதிக்க வேண்டும்; வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரிக்குள் நுழையும் வாகனங்களில் 'பிளாஸ்டிக்' உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்து அனுமதிக்க வேண்டும்,' என்ற உத்தரவு மட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், மேல் கூடலூர் சோதனை சாவடி பணியில் ஈடுபட்டுள்ள சில போலீசார் மற்றும் பெண் பணியாளர்கள் உள்ளூர் வாகனங்களை நிறுத்தி நீண்ட நேரம் விசாரணை செய்வது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.கூடலுார் ஊராட்சி ஒன்றிய அதிகாரி சலீம் கூறுகையில், ''இது குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் உரிய அறிவுரை வழங்கப்படும்,'' என்றார்.