| ADDED : மே 24, 2024 01:25 PM
பந்தலூர் : நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தேவாலா ஹட்டி பகுதியை சேர்ந்தவர் பழனியான்ட்டி. 84 வயதான இவர் அவரது மகள் செல்வநாயகி வீட்டில் குடியிருந்து வந்தார். இன்று அதிகாலை 2-30 மணிக்கு வீட்டிற்கு வெளியே உள்ள கழிவறைக்கு செல்வதற்காக கதவை திறந்து வெளியே வந்துள்ளார். அப்போது வீட்டு வாசலில் நின்றிருந்த ஒற்றை யானை முதியவர் பழனியான்டியை தாக்கியுள்ளது. அலறல் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்த செல்வநாயகி யானையை பார்த்து கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் மற்றும் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சேர்ந்து யானையை துரத்தி, காயமடைந்த பழனியாண்டியை மீட்டு பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.தகவலறிந்த கூடலூர் ஆர்.டி.ஓ. செந்தில்குமார், கூடுதல் எஸ்.பி. செளந்தர்ராஜன், உதவி வன பாதுகாவலர் கருப்பையா, எம்.எல்.ஏ. ஜெயசீலன், முன்னாள் எம்.எல்.ஏ. திராவிடமணி உள்ளிட்ட அதிகாரிகள் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்கள். பிரேத பரிசோதனைக்கு பின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முதல் கட்டமாக 50 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தொகையும், 9- லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான செக் வழங்கப்பட்டதுடன், அதிகாரிகள் மற்றும் கட்சியினர் அஞ்சலி செலுத்தினார்கள்.