சாலையில் யானை: பைக்கில் வந்தவர் எஸ்கேப்
பந்தலுார்: பந்தலுார் அருகே முக்கட்டி பகுதியில் யானையிடம் சிக்கிய நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.பந்தலுார் அருகே முக்கட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக ஒற்றை ஆண் யானை முகாமிட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.கடந்த இரண்டு நாட்களுக்கு முன்,முதுமலை புலிகள் காப்பக நெலாக்கோட்டை வனச்சரக குடியிருப்பு பகுதியில் பகலில் முகாமிட்ட இந்த யானை, இரவு, 7:00- மணிக்கு வயநாடு செல்லும் சாலையில் உலா வந்தது. இதனால், வாகன ஓட்டுனர்கள் சிரமப்பட்டனர். வனத்துறையினர் யானையை வனத்துக்குள் விரட்டினர். இந்நிலையில், நேற்று மாலை இந்த யானை குந்தலாடியிலிருந்து முக்கட்டி செல்லும் சாலையோர தேயிலை தோட்டம் வழியாக சாலையை கடக்க முயன்றது. அதனை பார்த்த சிலர் சப்தம் எழுப்பி சாலையில் வாகனங்கள் வருவதை தடுத்தனர். இதை அறியாத ஒருவர் பைக்கில் வேகமாக வந்ததை பார்த்த யானை, அவரை தாக்க முற்பட்டு துரத்தியது. பைக்கில் வந்தவர் பைக்கை போட்டுவிட்டு ஓடி தப்பினார். பின்னர் யானை பைக் அருகே சென்று போது, ஆள் இல்லாததால் அங்கிருந்து வனப்பகுதிக்கு சென்றது. தொடர்ந்து, வனத்துறையினர் யானையை கண்காணித்து வருகின்றனர். இதனால், திடீர் பரபரப்பு ஏற்பட்டது.