| ADDED : செப் 11, 2026 05:51 PM
குன்னுார்: குன்னுார் அருகே கோடேரி கிராமத்தில் கடந்த, 2 நாட்களாக முகாமிட்டுள்ள, 6 காட்டு யானைகள், விவசாய நிலங்களில் புகுந்து மலை காய்கறிகளை சேதம் செய்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். குன்னுார் சுற்றுவட்டார பகுதிகளில் வனத்தை விட்டு வெளியேறிய, 6 காட்டு யானைகள் கோடேரி கிராம விவசாய நிலங்களுக்குள் புகுந்து காய்கறிகளை சேதம் செய்து வருகின்றன. கடந்த இரண்டு நாட்களாக பகலில் அருகிலுள்ள சோலையில் தஞ்சமடையும் இந்த யானைகள், இரவில் கிராமத்திற்குள் புகுந்து அறுவடைக்கு தயாராக இருந்த மேரக்காய், உருளைகிழங்கு மற்றும் பிற காய்கறிகளை சேதம் செய்தன. இதனால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. குந்தா வனத்துறை ஊழியர்கள் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணிகளில் ஈடுபட்டனர். கிராம மக்கள் கூறுகையில்,‘ யானைகளால் ஒன்றரை ஏக்கர் வரை காய்கறிகள் சேதமாகி உள்ளது. மேலும், விசைதெளிப்பான் கருவிகள், தடுப்பு வேலிகளையும் சேதப்படுத்தி உள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும். யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்,’ என்றனர்.