அவசர கால உபகரணங்கள் தயாராக இருக்கணும்: பருவ மழை ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் உத்தரவு
ஊட்டி : 'வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசர காலத்தில் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் தயாராக கையில் வைத்திருக்க வேண்டும்,' என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.நீலகிரியில் வட கிழக்கு பருவமழையை ஒட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில், அரசு துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது.கூட்டத்தில், கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்து பேசியதாவது: நீலகிரியில் வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ளதை ஒட்டி, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் தங்களது மீட்பு உபகரண வாகனங்களுடனும், பேரூராட்சி, ஊராட்சி, நகராட்சி உள்ளிட்ட துறையினரும் மீட்பு உபகரணங்கள் மற்றும் பொருட்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். முதல் நிலை பொறுப்பாளர்களின் மொபைல் எண்கள் மற்றும் அவசர காலத்தில் பயன்படுத்தும் உபகரணங்கள் அனைத்தும் தயாராக கையில் வைத்திருக்க வேண்டும்.மழை, காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் சாலைகளில் விழும் மரங்கள், மண் சரிவை உடனடியாக சரி செய்யும் வகையில், மாநில, தேசிய நெடுஞ்சாலை துறையினர் போதுமான பொக்லைன், பவர்ஷா, மணல் மூட்டைகள் ஆங்காங்கே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மருந்து இருப்பு அவசியம்
மருத்துவ துறையினர் ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவக்குழுவினர், மருந்து இருப்பு போன்றவைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மின்சாரம் வாரியத்தின் மூலம் மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர் போன்ற மின் சாதனங்களுடன் பேரிடர் ஏற்படும் நேரத்தில் தடையின்றி மின்சாரம் வழங்க போதுமான பணியாளர்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். மாவட்ட வழங்கல் துறை மற்றும் கூட்டுறவு துறையின் சார்பில் பொதுமக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் கூடுதலாக இருப்பில் வைத்திருக்க வேண்டும். கல்வெட்டுகளை துார்வாரி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அந்தந்த வட்டத்தில் உள்ள தாசில்தார்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், குன்னுார் கூடுதல் கலெக்டர் சங்கீதா உட்பட அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.