எல்லையில் க்யூ.ஆர்., கோடு பயன்படுத்தி நுழைவு வரி வசூல்
கூடலுார் ; தமிழக-கேரள எல்லைகளில் உள்ள, வாகன நுழைவு வரி வசூல் மையங்களில், 'க்யூ.ஆர்.,' கோடு பயன்படுத்தி வாகன நுழைவு வரி வசூல் செய்யும் முறையை நடைமுறைக்கு வந்தது.நீலகிரி மாவட்டத்துக்கு வரும் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநில எல்லைகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில், நுழைவு வரி வசூல் மையம் அமைத்து, வாகனங்களுக்கு நுழைவு வரி வசூல் செய்யப்படுகிறது.அதில், தமிழக- கர்நாடகா எல்லையான முதுமலை கக்கனல்லா சோதனை சாவடி தேசிய நெடுஞ்சாலை இருப்பதால், வாகன நுழைவு வரி வசூலுக்கு மாற்றாக, பசுமை வரி வசூல் செய்து வருகின்றனர்.மாநில எல்லைகளில், வாகனங்களுக்கு, ரசீது வழங்கி நுழைவு கட்டணத்தை பணமாக மட்டுமே பெற்று வந்தனர். இந்நிலையில், கர்நாடகா பகுதியில் இருந்து வரும் வாகனங்களுக்கு, பசுமை வரி வசூல் செய்ய 'க்யூ.ஆர்.,' கோடு வசதியை மாவட்ட நிர்வாகம் நவ., மாதம் நடைமுறைபடுத்தியது.இதன் தொடர்ச்சியாக, தற்போது, தமிழக -கேரள எல்லையில் உள்ள, பிற வாகன நுழைவு வரி மையங்களில் தற்போது, 'க்யூ.ஆர்.,' கோடு ஸ்கேன் செய்து நுழைவு கட்டணம் வசூல் செய்யும் முறையை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தி உள்ளது. இதன் வாயிலாக, கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வரும் வாகன ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள், எளிதாக நுழைவு கட்டணம் செலுத்தி செல்கின்றனர்.அதிகாரிகள் கூறுகையில், 'மாநில எல்லையில் உள்ள வாகன வரி வசூல் மையங்களில், ரசீது வழங்கி நுழைவு கட்டணம் பெற்று வருகின்றனர். இதில் சில்லரை தட்டுப்பாடு உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க, 'க்யூ.ஆர்.,' கோடு ஸ்கேன் மூலமும் நுழைவு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது,' என்றனர்.