சேரிங்கிராசில் விரிவாக்க பணி; சாலையோர பூங்காவுக்கு பாதிப்பு
ஊட்டி ; ஊட்டி சேரிங்கிராசில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலை விரிவாக்க பணியை மேற்கொள்ள ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊட்டி நகரில் சேரிங்கிராஸ் பகுதி முக்கிய சாலையாக உள்ளது. இவ்வழியாக அரசு தாவரவியல் பூங்கா சாலை, கோத்தகிரி சாலை, பிங்கர் போஸ்ட், கமர்சியல் சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இப்பகுதியை கடந்து செல்கிறது. இங்குள்ள நடபாதைகளை பொதுமக்களும் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். குறிப்பிட்ட இச்சாலையில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, இங்குள்ள பழமையான பூங்கா ஓரமுள்ள நடைபாதையை இடித்து, பூங்காவின் அளவை குறைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு, மாவட்ட ஆவண காப்பம் சார்பில் ஆட்சேபம் தெரிவித்து, முதல்வர், கலெக்டருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் குழந்தைராஜ் கூறுகையில்,''போக்குவரத்து நெரிசலை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால், அங்குள்ள சாலையோர பூங்கா அருகே, அதற்கான பணிகள் நடந்து வருகிறது,'' என்றார்.