குன்னுார்;'நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலை விலை வீழ்ச்சி அடைந்து வருவதால், தேர்தல் அறிவிப்பு வெளிவரும் முன் தீர்வு காண வேண்டும்,' என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலை விவசாயத்தை நம்பி, 60 ஆயிரம் விவசாயிகள் உள்ளனர். விவசாயிகள் வழங்கும், பசுந்தேயிலையை கொண்டு தொழிற்சாலைகளில் தேயிலை துாள் உற்பத்தி செய்யப்பட்டு, குன்னுார் ஏல மையத்தில் ஏலம் விடப்படுகிறது. இந்த ஏல விலையின் அடிப்படையில், பசுந்தேயிலைக்கு, மாதந்தோறும் தேயிலை வாரியம் விலை நிர்ணயம் செய்கிறது. இதன்படி, ஜன., மாதத்திற்கான பசுந்தேயிலை கிலோ, 15.04 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிச., மாதம், 15.34 ரூபாய் என இருந்தது. இந்நிலையில், 'கடந்த ஆண்டு ஜன.,ல், 18.58 ரூபாய்; பிப்.,ல் 19.23 ரூபாய்,' என, அதிகபட்ச விலை கிடைத்து.ஒரு கிலோ தேயிலை துாள் உற்பத்தி செய்ய, 4 கிலோ பசுந்தேயிலை சராசரியாக தேவைப்படும் நிலையில், தற்போதைய பசுந்தேயிலைக்கான செலவு கிலோவுக்கு, 22.50 ரூபாய் என கணக்கிடப்படுகிறது. எனினும், விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.நீலகிரி சிறு தேயிலை விவசாயிகள் விழிப்புணர்வு மைய அமைப்பாளர் வேணுகோபால் கூறுகையில், ''விவசாயிகளுக்கு கிடைக்கும் பசுந்தேயிலை விலை தொடர்ந்து இறங்கு முகமாகவே உள்ளது. குன்னுாரில் உள்ள தேயிலை வாரிய அதிகாரிகள் இதற்கு தீர்வு காண வேண்டிய நிலையில் மவுனம் சாதித்து கால தாமதம் செய்கின்றனர். தேர்தல் அறிவிப்பு வெளியானால், இங்குள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரி தேர்தல் பணிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இதனை காரணம் காட்டி பசுந்தேயிலை விலை வீழ்ச்சிக்கு தீர்வு காண முடியாத நிலை ஏற்படும். எனவே, தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு தேயிலை வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.