உழவர் சந்தை சாலை துண்டிப்பு 4 நாட்களாக மக்கள் சிரமம்
குன்னூர்: குன்னூர் உழவர் சந்தை செல்லும் சாலை தோண்டப்பட்டு, 4 நாட்கள் ஆகியும் சீரமைக்கப்படாமல் உள்ளதால், உழவர் சந்தை செல்லும் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், குன்னூரில் கடந்த 18ம் தேதி பெய்த கனமழையால், உழவர் சந்தையில் இருந்து வரும் மழை நீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டதால், மாடல் ஹவுஸ் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் சேறுடன் மழை நீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. இரவில் பொக்லைன் வரவழைத்து சாலையை தோண்டி கால்வாய் சீரமைத்த நிலையில், ரோடு சரிவர மூடப்படாமல் விடப்பட்டது. இவ்வழியாக உழவர் சந்தைக்கும், இப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கும் வாகனங்கள் செல்ல முடியாமல் நான்கு நாட்களாக மக்கள் அவதிக் குள்ளாகியுள்ளனர். எனினும், மவுண்ட் ரோடு புளூ ஹில்ஸ் வழியாக சிலர் மட்டுமே செல்வதால், உழவர் சந்தையில் காய்கறி விற்பனையிலும் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் 4 நாட்களாக புகார் தெரிவித்த போதும், நகராட்சியில் பலரும் தீபாவளி விடுமுறையில் உள்ளதால் சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'சீரமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும், ' என்றனர்.