உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  நெல் அறுவடை பணி துவக்கம் விவசாயிகள் நிம்மதி

 நெல் அறுவடை பணி துவக்கம் விவசாயிகள் நிம்மதி

கூடலுார்: கூடலுாரில் அறுவடை இயந்திரம் கிடைக்க தாமதம் ஏற்பட்ட நிலையில், ஒரு வாரம் தாமதமாக நெல் அறுவடை பணியை விவசாயிகள் திரும்பி உள்ளனர். கூடலுார் பகுதி விவசாயிகள் நடப்பாண்டு பருவ மழையை தொடர்ந்து, ஜூன் மாதம் வயல்களில் உழவு பணியை மேற்கொண்டு, ஆடி மாதம் அதிகம் மகசூல் தரக்கூடிய, 'பாரதி; ஐ.ஆர்., 20; கோ-50; கந்தகசால்,' ஆகிய நெல் வகைகளை நடவு செய்தனர். நெற்கதிர்கள் முதிர்ந்து இம்மாதம் முதல் வாரத்தில் அறுவடை பணி துவங்க தயாராகினர். அறுவடைக்கான ஊழியர்கள், குறித்த நேரத்தில் அறுவடை இயந்திரம் கிடைக்கததாலும் நெல் அறுவடை பணி துவங்க முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்நிலையில், சில விவசாயிகள் தங்களுக்கு பழக்கமான பழங்குடி பெண்கள் உதவியுடன் கதிர் அறுவடை பணியை துவங்கியுள்ளனர். ஆனால், பெரும்பாலான விவசாயிகள் வாடகைக்கு இயந்திரம் கிடைக்காமல் அறுவடை செய்ய முடியாமல் கவலை அடைந்தனர். நீண்ட போராட்டத்திற்கு பின், சமவெளி பகுதியில் இருந்து, வாடகைக்கு நெல் அறுவடை இயந்திரம் வரவழைத்து கம்மாத்தி, குணில் பகுதிகளில் நெல் அறுவடையை துவங்கியுள்ளனர். விவசாயிகள் கூறுகையில், 'நெல் அறுவடைக்கு அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் கிடைக்காததால், இயந்திரம் மூலம் நெல் அறுவடை பணிகள் நடந்து வருகிறது. இதன் வாடகை ஆண்டுக்கு ஆண்டுஅதிகரித்து வருவதால், வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், நடப்பு ஆண்டு அறுவடை இயந்திரம் குறித்த நேரத்தில் கிடைக்காததால் நெல் அறுவடை தாமதமானது. வரும் காலங்களில் இது போன்ற பிரச்னை ஏற்படுவதை தடுக்க, அரசு நெல் விவசாயத்துக்கு தேவையான அனைத்து மானிய உதவிகளுடன், குறைந்த வாடகை அறுவடை இயந்திரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், கூடலூரில் நெல் விவசாயம் அழிந்துவிடும் சூழல் உள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை