மலை காய்கறி விலை ஏற்றம்: விவசாயிகள் ஆறுதல்
குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் கேரட் மற்றும் பீட்ரூட் விலை உயர்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டம், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உட்பட சுற்றுப்புற பகுதிகளில் கேரட், பீட்ரூட், உருளைகிழங்கு உள்ளிட்ட விவசாயம் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக விலையில் ஏற்றம் காணாமல் இருந்த கேரட் விலை தற்போது உயர்ந்து வருகிறது. நேற்றைய மேட்டுப்பாளையம் ஏலத்தில் கிலோவிற்கு குறைந்தபட்சம் 40 ரூபாய் முதல் 65 ரூபாய் வரை கிடைத்தது. இதே போல, கடந்த வாரம் 42 ரூபாய் வரை விலை போன பீட்ரூட் அதிகபட்சமாக 60 ரூபாய் வரை ஏலம் போனது. பீன்ஸ் கிலோ ரூ.75 எனவும், புஷ் பீன்ஸ் ரூ.85க்கு ஏலம் போனது. விலை வீழ்ச்சியில் இருந்த மலை காய்கறிகள் விலை தற்போது அதிகரித்து வருவது விவசாயிகள் மத்தியில் ஆறுதலை அளித்துள்ளது.