உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  தாமதமாகும் நெல் அறுவடை கவலையில் விவசாயிகள்; தொழிலாளர்கள், இயந்திரம் கிடைக்காததால் அப்செட்

 தாமதமாகும் நெல் அறுவடை கவலையில் விவசாயிகள்; தொழிலாளர்கள், இயந்திரம் கிடைக்காததால் அப்செட்

கூடலுார்: கூடலுார் பகுதியில், தொழிலாளர்கள், அறுவடை இயந்திரம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதால், நெல் அறுவடை பணியை துவங்க முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கூடலுாரில் உள்ள வயல்களில், கோடையில் காய்கறியும், பருவமழை காலத்தில் நெல் விவசாயமும் நடந்து வருகிறது. இப்பகுதியில் நெல் நடவு, அறுவடை பணிகளில் பழங் குடியினர் ஈடுபட்டு வந்தனர். இவர்கள், வேறு பணிகளுக்கு சென்று விடுவதால், நெல் விவசாய பணிகளுக்கு தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. இதனால், விவசாயிகள் நேந்திரன் வாழை, இஞ்சி போன்ற விவசாயத்துக்கு மாறி வருவதால், 1000 ஏக்கரில் பயிரிடப்பட்டு நெல் விவசாயம், தற்போது, 100 ஏக்கராக குறைந்து விட்டது. நடப்பாண்டு ஆடி மாதம், கிடைத்த சில தொழிலாளர்களை வைத்து நடவு செய்த நெற் பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்நிலையில், தொழிலாளர்கள் கிடைக்காததாலும், நெல் அறுவடை செய்யும் இயந்திரம் வாடகைக்கு கிடைப்பதில் தாமதமாகி வருவதாலும், நெல் அறுவடை துவங்க முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விவசாயி முருகன் கூறுகையில், 'இப்பகுதியில், நெல் விவசாய பணிகளில் ஈடுபட்டு வந்த பழங்குடியினர் வேறு பணிக்கு சென்று விட்டதால், நெல் அறுவடைக்கு இயந்திரத்தை நம்பியுள்ளோம். வாடகைக்கு இங்கு கொண்டு வரப்படும் நெல் அறுவடை இயந்திரம் குறித்த நேரத்தில் வராததால், நெல் அறுவடை பணிகள் இதுவரை துவங்கவில்லை. நெற்பயிர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு நெல் அறுவடை செய்யும் இயந்திரத்தை குறைந்த வாடகையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது, 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ பழங்குடியினரை நெல் அறுவடை பணியில் ஈடுபடுத்தி விவசாயிக்கு உதவ வேண்டும்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை