மேலும் செய்திகள்
சிறுமுகை வனத்தில் புல் செயல்விளக்கத் திடல்
08-Nov-2024
பந்தலுார்; சேரம்பாடி வனப்பகுதியில், யானைகளுக்கான உணவு பற்றாக்குறையை போக்க தீவன புற்கள் பயிரிடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.கூடலுார் வன கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில், கூடலுார், ஓவேலி, ஜீன்பூல், தேவாலா, சேரம்பாடி, பிதர்காடு ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. அதில், பந்தலுார் அருகே சேரம்பாடி வனச்சரகம், தேயிலை தோட்டங்கள் மற்றும் கிராமங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இதனால், அடிக்கடி யானை- மனித மோதல் ஏற்படுகிறது. பல உயிர் பலிகளும் தொடர்கிறது. மோதலுக்கான காரணம் என்ன?
இத்தகைய மோதலுக்கு, வனப்பகுதியில் யானைகளுக்கான உணவு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதுடன், உண்ணி செடிகள் உட்பட பிற களைச் செடிகள் அதிகரிப்பால் புற்களின் வளர்ச்சி வனப்பகுதியில் தடைபட்டுள்ளது. இதனால், யானைகள் உணவு தேடி ஊருக்குள் வந்து, விவசாய பயிர்களை அழிப்பதுடன், மனிதர்களையும் தாக்கி வருகிறது. 'இதற்கு தீர்வு காண, வனப்பகுதிகளில் யானைகளுக்கு தேவையான தண்ணீர் மற்றும் உணவு தேவையை பூர்த்தி செய்ய தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, வன உயிரின ஆர்வளர்கள் வலியுறுத்தி வந்தனர்.இதை தொடர்ந்து, சேரம்பாடி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், யானைகள் தண்ணீர் பருக ஏதுவாக தடுப்பணைகள் மற்றும் சிறிய குளங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. முதற் கட்டமாக 50 ஏக்கரில் புற்கள்
மேலும், களைச் செடிகள் முழுமையாக அகற்றப்பட்டு, அங்கு யானை உள்ளிட்ட வன விலங்குகளுக்கு தேவையான பசுந்தீவனங்களை பயிடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர். முதல் கட்டமாக, 50 ஏக்கர் பரப்பில் களைச் செடிகள் அகற்றப்பட்டு, அந்தப் பகுதியில் மூங்கில் விதைகள், ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா பகுதிகளை பூர்வீகமாகக் கொண்ட, 'தீமேடா', வறட்சி மற்றும் வெப்பத்தை தாங்கி வளரும் தன்மை கொண்ட 'கொழுக்கட்டை புல்', அடர்த்தியாக புதர்போன்று வளரும் தன்மை கொண்ட 'யானைப்புல்' ஆகியவை பயிரிடப்படுகிறது.இதன் தொடர்ச்சியாக, வனப்பகுதியின் அனைத்து இடங்களிலும் உண்ணிச் செடிகள் மற்றும் அன்னிய தாவரங்கள் முழுமையாக அகற்றப்பட்டு, அங்கும் இதுபோன்ற தீவனங்கள் உருவாக்கும் பணிகள் துவக்கப்பட உள்ளன.வனச்சரகர் அய்யனார் கூறுகையில், ''வனப்பகுதியில் தீவன பற்றாக்குறை ஏற்படும்போது, உணவு தேடி ஊருக்குள் வரும் யானைகள் எதிர்பாராத விதமாக மனிதர்களை தாக்குவது மற்றும் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனை கட்டுப்படுத்தும் விதமாக தற்போது வனப்பகுதிகளில் யானைகள் மற்றும் வன விலங்குகள் விரும்பி உண்ணும் தாவரங்களை வளர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த பணி மேற்கொள்ளும் நிலையில், வனப்பகுதிகளில், வன விலங்குகளுக்கு தேவையான உணவுகள் எளிதாக கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படும். அவைகள் கிராமங்களுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படும் தேவை இருக்காது,'' என்றார்.
08-Nov-2024