உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  தேசிய நெடுஞ்சாலையில் குட்டியுடன் உலா வரும் காட்டு யானைகள்: எச்சரிக்கையுடன் செல்ல வனத்துறை அறிவுரை

 தேசிய நெடுஞ்சாலையில் குட்டியுடன் உலா வரும் காட்டு யானைகள்: எச்சரிக்கையுடன் செல்ல வனத்துறை அறிவுரை

கூடலுார்: கூடலுார்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் குட்டியுடன் முகாமிடுவதால் ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் பயணிக்க வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். கூடலுார் அருகே, ஊட்டி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள, ஊசிமலை காட்சி முனையில் கடந்த அக்., 23ம் தேதி காட்டு யானை குட்டி ஈன்றது. இரண்டு யானைகள் உடனிருந்தன. தொடர்ந்து, ஊசிமலை வனப்பகுதியில் குட்டியுடன் உலா வரும் யானை கூட்டத்தை ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், தெய்வமலை அருகே, ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் இரவில் குட்டியுடன் யானைகள் முகாமிட்டது. வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிலர் சப்தமிட்டு யானை விரட்டினர். சிறிது நேரத்திற்கு பின் குட்டியுடன் யானைகள் வனப்பகுதிக்கு சென்றது. வனத்துறையினர் கூறுகையில், 'ஊசி மலையை ஒட்டிய வனப்பகுதியில் குட்டியுடன் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் உணவு, குடிநீருக்காக அடிக்கடி சாலையை கடந்து செல்கின்றன. எனவே, இவ்வழியாக பயணிக்கும் ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும். யானைகள் சாலையில் முகாமிட்டால், அவைகள் சாலை கடந்து செல்லும் வரை, இடையூறு ஏற்படுத்தாமல் காத்திருந்து, பயணிக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்