காட்டெருமை இறப்பு; வனத்துறை விசாரணை
கோத்தகிரி; கோத்தகிரி அருகே காட்டெருமை இறந்தது தொடர்பாக, வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். கோத்தகிரி கட்டபெட்டு வனச்சரகம், குடிமனை பகுதியில் தேயிலை தோட்டங்கள் நிறைந்துள்ளன. தவிர, அப்பகுதியில் காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், உணவை தேடி வனப்பகுதியில் இருந்து காட்டெருமைகள் முகாமிட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக, அதே பகுதியில் வயதான காட்டெருமை, சுற்றி திரிந்த நிலையில், நேற்று காலை இறந்துள்ளது. பகுதி மக்கள் கொடுத்த தகவலின் படி, வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து உறுதி செய்தனர். கால்நடை மருத்துவர் ரேவதி, பிரேத பரிசோதனை செய்த பின், அதே இடத்தில் புதைக்கப்பட்டது. வனத்துறையினர் கூறுகையில், '15 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டெருமை சுகவீனமாக இருந்த நிலையில் இறந்துள்ளது. பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அதே இடத்தில் புதைக்கப்பட்டது,' என்றனர்.