தாயை பிரிந்து தவித்த இருவாச்சி பறவை மீட்டு தாவரவியல் மையத்தில் விட்ட வன ஊழியர்
கூடலுார்; கூடலுார் அருகே, தாயை பிரிந்து தவிர்த்த இருவாச்சி பறவையை வனத்துறையினர் மீட்டு, ஜீன்பூல் தாவரவியல் மைய வனப்பகுதியில் விடுவித்தனர்.கூடலுார் மரப்பாலம் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக அரிய வகை சாம்பல் நில இருவாச்சி பறவைகள் காணப்படுகின்றன. பிற வனப்பகுதிகளில் இருந்து சீசனுக்கு வந்த பறவைகள், இங்குள்ள குறுமிளகு செடிகளில் அமர்ந்து, மிளகு பழங்களை உட்கொண்டு வருகின்றன. இதனை பறவை ஆர்வலர்கள்; உள்ளூர் மக்கள் ரசித்து செல்கின்றனர்.இந்நிலையில், நேற்று காலை தாயை பிரிந்த இருவாச்சி பறவையின் குஞ்சு புளியம்பாறை சாலையில் தவித்து கொண்டிருந்தது. அதனை பார்த்த மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்ததுடன், அப்பகுதியில் உலா வந்த குரங்கு மற்றும் தெருநாய்கள் அதன் அருகே செல்லாத வகையில் பாதுகாப்பு அளித்தனர். அதிகாரிகள் உத்தரவின் கீழ், வேட்டை தடுப்பு காவலர் வாசுதேவன், இருவாச்சி பறவையை பத்திரமாக மீட்டு எடுத்து சென்றார். மக்கள் நிம்மதி அடைந்தனர்.வனத்துறையினர் கூறுகையில், 'மீட்கப்பட்ட இருவாச்சி பறவையின் குஞ்சு நல்ல நிலையில் உள்ளது. தற்போது தான் பறக்க பழகி வருகிறது. அதனை எடுத்து சென்று, ஜீன்புல் வனப்பகுதியில் விடுவித்தோம். இப்பகுதியில் காணப்படும் மற்றொரு இருவாச்சி அதன் தாயாக இருந்தால், அதனை கண்டறிந்து விடும்,' என்றனர். பறவை ஆய்வாளர்கள் கூறுகையில், 'தமிழகத்தில் நான்கு வகையான இருவாச்சி பறவைகள் காணப்படுகின்றன. இவைகளின் எச்சத்தில் உள்ள தாவர விதைகள் உயிர்ப்பு தன்மை மிக்கதாக இருக்கும். இதனால், அதிலிருந்து வளரும் மரங்கள் செழித்து வளரும். இப்பறவைகளை பாதுகாப்பதன் மூலம் மழை காடுகளின் அழிவையும் தடுக்க முடியும். எனவே, கூடலுாரில் தற்போது குடியிருப்பு பகுதிகளில் காணப்படும் இரு வகை இருவாச்சி பறவைகளை வனத்துறையினர் கண்காணித்து பாதுகாக்க வேண்டும்,' என்றனர்.