கூடலுாரில் இலவச மருத்துவ முகாம்
கூடலுார்: கூடலுாரில் நடந்த இலவச மருத்துவ முகாமில், 110 மாற்று திறனாளி குழந்தைகள் பங்கேற்றனர்.கூடலுார் வண்டிபேட்டை ஊராட்சி ஒன்றிய பள்ளியில், மாற்று திறனாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில், மாற்று திறனாளி குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நேற்று நடந்தது. முகாமை, மாவட்ட உதவி திட்ட அலுவலர் அர்ஜூன் துவக்கி வைத்தார்.அரசு மருத்துவமனை டாக்டர்கள் சுரேஷ், அல்லிராணி, ரமேஷ் ஆகியோர் குழந்தைகளை பரிசோதனை செய்து, அடையாள அட்டை, தேவையான மருத்துவ சிகிச்சை, தேவை உள்ளவர்களுக்கு உபகரணங்கள் வழங்க பரிந்துரை செய்தனர். 'பிசியோதெரபி' நிபுணர் புனிதா சிகிச்சை அளித்தார். பல்வேறு பகுதிகளை சேர்ந்த குழந்தைகள், மாணவர்கள், 110 பேர் பங்கேற்றனர். சிகிச்சைக்கு வந்திருந்த குழந்தைகளுக்கு உணவு மற்றும் பயணப்படி வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, மாற்று திறனாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறையினர் செய்திருந்தனர்.