உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கருகும் பசுந்தேயிலை! உறைபனியின் தாக்கத்தால் இதுவரை 250 ஏக்கர் பாதிப்பு

கருகும் பசுந்தேயிலை! உறைபனியின் தாக்கத்தால் இதுவரை 250 ஏக்கர் பாதிப்பு

குன்னுார்: நீலகிரி மாவட்டத்தில் உறைபனியால் பாதிக்கப்பட்ட தேயிலை தோட்டங்களை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு, 'உபாசி' அறிவுறுத்தி உள்ளது.நீலகிரி மாவட்டத்தின் முக்கிய தொழிலாக தேயிலை துாள் உற்பத்தி உள்ளது. கடந்த, 2024 நவ., மாத புள்ளிவிபரப்படி, 39 ஆயிரத்து 825 ஏக்கர் பரப்பளவில், பெரிய எஸ்டேட்களில் தேயிலை பயிரிடப்படுகிறது.88 ஆயிரத்து 930 ஏக்கர் பரப்பில், 49 ஆயிரத்து 673 சிறு தேயிலை விவசாயிகள் தேயிலை பயிரிடுகின்றனர். மாவட்டத்தில் எஸ்டேட் நிறுவனங்களின், 47 தொழிற்சாலைகள் உட்பட, 258 தொழிற்சாலைகளில் தேயிலை துாள் உற்பத்தி செய்யப்படுகிறது,

தேயிலை ரகங்கள் பல விதம்

இங்கு, 'சி.டி.சி; ஆர்த்தோடக்ஸ்' ரகங்கள் அதிகம் உற்பத்தி செய்யும் நிலையில், தற்போது 'கிரீன் டீ; சில்வர் டிப் டீ' மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட தேயிலை, மூலிகை டீ,' என, பல்வேறு தேயிலை துாள் ரகங்கள் உற்பத்தியாகிறது. கடந்த ஆண்டில், காலநிலை மாற்றத்தால் தேயிலை தொழில் வீழ்ச்சியை சந்தித்தது. இந்நிலையில், பனி பாதிப்பால், நடப்பாண்டும் பசுந்தேயிலை மகசூல் குறைவதால் தேயிலை உற்பத்தியும் பாதிக்கப்பட்டு வருகிறது.

உறைபனியால் பாதிப்பு

கடந்த, 2020ம் ஆண்டுக்கு முன்பு, 3,700 ஏக்கர் முதல் 4,900 ஏக்கர் பரப்பளவில் தேயிலை செடிகள் கருகின. 2021--22 ஆண்டுகளில் டிச., ஜன, பிப்., மாதங்களில் பனிப்பொழிவு குறைந்ததால், 1,200 ஏக்கர் பரப்பளவில் தேயிலை செடிகள் கருகின. 2023ம் ஆண்டு பாதிப்பு அதிகரித்தது.உபாசி வேளாண் ஆராய்ச்சி மைய உதவி இயக்குனர் முருகேசன் கூறுகையில்,''கடந்த, 2024, டிச., இறுதியில் உறைபனியால் தேயிலை செடிகள் பாதிப்பு ஓரளவு இருந்தது. தொடர்ந்து உறை பனி தாக்கம் அதிகரித்தது. இதுவரை, ஊட்டி, குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள எஸ்டேட்களில் மட்டும், 250 ஏக்கர் பரப்பளவிலான தேயிலை தோட்டங்களில் பசுந்தேயிலை செடிகள் கருகின. பனி நீடிக்கும் பட்சத்தில் மேலும் அதிகரிக்கும். பசுந்தேயிலை நுனி இலைகளை பறித்து மற்றவை தவிர்க்க வேண்டும். பனி பாதிப்பு துவங்கும் முன், நவ., மாதத்தில், தாய் இலை பறிப்புக்கு உட்பட்டிருக்க வேண்டும். இது பாதிப்பை கட்டுப்படுத்தும். மீட்பு காலங்களில் செடிகள் வளர்ச்சி மற்றும் மீண்டும் வளருவதற்கு 'துத்தநாக சல்பேட், போலியார்' பயன்படுத்தலாம்,'' என்றார்.

இழப்பீடு வழங்க வேண்டும்

குந்தா மேற்குநாடு தேயிலை விவசாயிகள் கூட்டமைப்பு சுகுமாரன் கூறுகையில், ''சமவெளி பகுதிகளில் ஆண்டுதோறும் மழை பேரிடரால் விவசாய பயிர்கள் பாதிப்பது போன்று, நீலகிரியில் பனி பாதிப்பால், டிச., முதல் மே மாதம் வரை வரத்து பாதித்து, வருமானம் இல்லாமல் சிரமப்படுவது தொடர்கிறது.குறிப்பிட்ட காலங்களில், விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையாக, 2000 ரூபாய் வழங்க வேண்டும்; மகளிருக்கு உரிமை தொகை வழங்கும் நிலையில், விவசாய குடும்ப மகளிருக்கும், இழப்பீடு தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி