| ADDED : நவ 24, 2025 05:21 AM
குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் கடும் மேகமூட்டம் காரணமாக வாகனங்களை இயக்க சிரமம் ஏற்பட்டது. குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஆண்டு தோறும் நவம்பர் மாதத்தில் வெயிலின் தாக்கத்துடன் பனிப்பொழிவு துவங்கும். இந்நிலையில், தற்போது வெயில், மழை, பனி, மேகமூட்டம் என நேரம் ஒரு காலநிலை நிலவுகிறது. நேற்று காலை குன்னூர் பகுதிகளில் கடும் மேகமூட்டம் நிலவியதுடன், சாரல் மழையும் நீடித்தது. முகப்பு விளக்குகளை பயன்படுத்தி வாகனங்கள் இயக்கியும் டிரைவர்கள் சிரமப்பட்டனர். சுற்றுலா பயணிகள் செல்பி மற்றும் புகைப்படம் எடுக்க அதிகம் ஆர்வம் காட்டினர். கடுங்குளீர் நிலவு வதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசார் கூறுகையில், கடும் மேகமூட்டம் நிலவும் நேரத்தில் மலைப்பாதையில் வாகனங்களை மித வேகத்தில் இயக்க வேண்டும், மிஸ்ட் லைட் அல்லது ஹெட்லைட் பயன்படுத்துவது எதிரே வரும் வாகனங்கள் தெரிவதற்கு ஏதுவாக இருக்கும், அடர்த்தியான மேகமூட்டம் நிலவும் இடங்களில் வாகனங்களை ஓவர்டேக் செய்யக்கூடாது, என்றனர்.