மலை பாதைக்கு வந்த கொம்பன் யானை; வாகனங்களில் செல்வோருக்கு எச்சரிக்கை
குன்னுார்; குன்னுார் ரயில் பாதையில் இருந்து மலைப்பாதைக்கு வந்த கொம்பன் யானை, வாகனங்களை விரட்டுவதால் டிரைவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.குன்னுார் மலை பாதையோர வனப்பகுதியில், தற்போது, 3 குழுக்களாக, 10க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. அதில், கொம்பன் யானை மலை ரயில் பாதை மட்டுமின்றி, மலை பாதையிலும் உலா வருகிறது.நேற்று முன்தினம், மலை ரயில் பாதை வடுக தோட்டம் அருகே இருந்த இந்த யானை, நேற்று கே.என்.ஆர்., பகுதியில் முகாமிட்டது. சாலையில் நீண்ட நேரம் நின்றிருந்த அந்த யானை வாகனங்களையும் விரட்டியது. அங்கு வந்த வனத்துறையினர் விரட்ட முற்பட்டபோது, அவர்களையும் விரட்டியது.தொடர்ந்து வனப்பகுதிக்கு சென்ற யானை மாலையில், 7வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தது. தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.வனத்துறையினர் கூறுகையில், 'சாலையோரம் இந்த யானை நிற்பதால், அதனை தொந்தரவு செய்து, புகைப்படம் எடுக்கக் கூடாது. வாகனங்களை முன்னெச்சரிக்கையுடன் இயக்க வேண்டும்,' என்றனர்.