வனப்பகுதியில் இப்படோரியம் களை செடிகள்: விலங்குகளின் உணவு தாவரங்களுக்கு பெரும் ஆபத்து
கூடலுார்: கூடலுார் வனப்பகுதியில் அதிகரித்து வரும் 'இப்படோரியம்' களைச் செடிகளால் வனச் சூழலுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், கூடலூர் பகுதியில் எந்த பயனும் இல்லாத உண்ணி, பார் த்தீனியம் செடிகள் அதிகளவில் காணப்படுகிறது. இவைகளால், வனப்பகுதிகளில், தாவர உண்ணிகள் விரும்பி உண்ணக் கூடிய தாவரங்கள், புற்கள் வளர முடியாத நிலை உள்ளது. இதனால், வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு அதிகரிக்கும் சூழல் ஏற்படுவதுடன், வனவிலங்குகள் இடம் பெயர்ந்து செல்வதிலும் சிரமங்கள் உள்ளது. இதனை தடுக்கும் வகையில், ஐகோர்ட் உத்தரவின் படி, வனத்துறையினர் உண்ணிச் செடிகளை அகற்றி வருகின்றனர். இந்நிலையில், உண்ணி செடிகள் போன்று தற்போது, கூடலுாரில் வனம் மற்றும் சாலையோரங்கள், இப்படோரியம் என்ற பயனற்ற களைச் செடிகள், அதிகளவில் வளர துவங்கி உள்ளது. விரைவாக பரவக்கூடிய இந்த செடிகளால் வனச் சூழலுக்கு ஆபத்து ஏற்பட்டு, தாவர உண்ணிகளுக்கு உணவு தட்டுப்பாடு அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், 'கூடலுாரில் புதிதாக பரவ துவங்கியுள்ள இப்படோரியும் செடிகளால் வனவிலங்குகள் விரும்பி உண்ண கூடிய தாவரங்களின் பரப்பளவு குறைந்து, அவைகளுக்கு உணவு தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. எனவே, உண்ணி செடிகளை போன்று, இப்படோரியம் செடிகளையும் முன்னெச்சரிக்கையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் அவைகள் வனப்பகுதியில் பரவுவதை தடுக்க முடியும்,' என்றனர்.