இளம் வயது திருமணங்களை தவிர்ப்பது அவசியம்; விழிப்புணர்வு முகாமில் அறிவுரை
பந்தலுார் : பந்தலுார் அருகே குந்தலாடி மற்றும் சோலாடி பழங்குடியின கிராமங்களில், இளம் வயது திருமணம் மற்றும் போதை பழக்கத்தை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். வருவாய் ஆய்வாளர் வாசுதேவன் வரவேற்றார். போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி பேசியதாவது: சமீப காலமாக இளம் வயது திருமணங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பழங்குடியின கிராமங்களில், சிறு வயது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டு வேலைகளில் ஈடுபடுத்துவது, மற்றும் கூலி வேலைக்கு அனுப்புவது போன்ற காரணங்களால் இளம் வயதில் திருமணம் செய்யும் அவலம் ஏற்படுகிறது.இந்த நிலை மாற பழங்குடியின மக்கள், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவது அவசியம் ஆகும். மேலும் இள வயதில் திருமணம் செய்வதால், தாயாகும் சிறுமி, மற்றும் அவருக்கு பிறக்கும் குழந்தை பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகும். இது போன்ற செயலில் ஈடுபடும் பெற்றோர் மற்றும் அதற்கு துணை நிற்கும் நபர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து, கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு சட்டத்தில் இடம் உள்ளது. இதனை உணர்ந்து பழங்குடியின பெற்றோர் மற்றும் பிற சமுதாய மக்களும் தங்கள் குழந்தைகளை படிக்க வைப்பதில் ஆர்வம் காட்டுவதுடன், திருமணவயது வந்த பின்னரே அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, 'கிராமங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது மற்றும் டாஸ்மாக் மதுபானங்களை அருந்திவிட்டு கிராமங்களில் வந்து தொல்லை படுத்துவது; டாஸ்மாக் மதுபான வகைகளை வாங்கி வந்து கிராமங்களில், கூடுதல் விலைக்கு விற்பது குற்ற செயலாகும்.இதுபோன்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால், அருகில் உள்ள போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். தகவல் தருபவரின் பெயர் விபரங்கள் ரகசியமாக வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' எனவும் அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் வருவாய் துறையினர், கவுன்சிலர் சற்குணசீலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சப்- இன்ஸ்பெக்டர் கண்ணன் நன்றி கூறினார்.