சிறுமுகை அருகே லிங்காபுரத்திற்கும், காந்த வயலுக்கும் இடையே, காந்தை ஆற்றின் குறுக்கே, 15.40 கோடி ரூபாய் செலவில், உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.ஆற்றின் குறுக்கே, 168 மீட்டர் நீளம், 9.95 மீட்டர் அகலத்தில் பாலமும், பாலத்தின் இரண்டு புறம், 75 மீட்டர் நீளத்துக்கு நடைபாதையும், சாலையும் அமைக்கப்பட உள்ளன. வெள்ளப்பெருக்கு
உயர் மட்ட பாலம் அமைக்க, ஆற்றின் குறுக்கே ஆறு இடங்களில் தூண்கள் கட்டப்பட உள்ளன. இதில் இரண்டு தூண்கள் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஒரு தூண் பாதி அளவு கட்டப்பட்டுள்ளது.மேலும், 3 தூண்கள் கட்ட அஸ்திவாரக் குழி தோண்டி வைத்த நிலையில், கோத்தகிரி மலைப்பகுதியில் பெய்த கனமழையால், காந்தை ஆற்றில், காட்டாறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதில், அஸ்திவாரக் குழிகளில் மண் மூடி, சேரும், சகதியும் நிறைந்தது. மேலும் தொடர் மழையின் காரணமாக பவானிசாகர் அணையில் நீர்மட்டம், 80 அடிக்கு மேல் உயர்ந்ததால், அணையின் தேக்கத் தண்ணீர், காந்தை ஆற்றிலும் தேங்கியது. அதனால் பாலத்தின் தூண்கள் கட்டும் பணிகள் பாதிப்படைந்தன. இதுகுறித்து காந்தவயல் மலைவாழ் மக்கள், லிங்காபுரம் விவசாயிகள் கூறியதாவது: பவானிசாகர் அணையின் நீர்மட்டம், 90 அடியை எட்டும் போது, காந்தை ஆற்றில் தண்ணீர் தேங்கி நிற்கும். 95 அடியை எட்டும் பொழுது, காந்தை ஆற்றின் குறுக்கே கட்டியுள்ள பழைய பாலம் தண்ணீரில் மூழ்கும். மேலும் புதிதாக போட்டுள்ள மண் சாலை முழுவதும், தண்ணீரில் மூழ்கிவிடும்.அப்போது பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் ஆகியோர் ஆபத்தான நிலையில் பரிசலில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். பாலம் பணிகள் நடைபெறவில்லை
தற்போது காந்தை ஆற்றில், தண்ணீர் முற்றிலும் குறைந்துள்ளது. ஆனால் கடந்த ஒரு மாதமாக பாலம் கட்டும் பணிகள் ஏதும் நடைபெறவில்லை. ஆற்றில் தண்ணீர் தேங்கி இருந்த போது, புதிதாக தார் சாலை அமைத்து இருக்கலாம்.ஆனால் டெண்டர் எடுத்தவர், பத்துக்கும் குறைவான ஆட்களை வைத்து, ஆமை வேகத்தில் வேலை செய்து வருகிறார். அதனால் தற்போது பாலம் கட்டும் பணிகள் நடைபெறாமல், தொய்வடைந்த நிலையில் உள்ளது. அடுத்த மழைக்காலம் துவங்கும் போது, காந்தை ஆற்றிலும், பவானி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.அதனால் மழை காலம் துவங்கும் முன், அதிக ஆட்களை வைத்து, துரிதமாக வேலை செய்ய, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
விரைவில் நடவடிக்கை
பாலம் கட்டும் பணிகளை கண்காணிக்கும், நெடுஞ்சாலை துறை பொறியாளர்கள் கூறியதாவது: காந்தை ஆற்றின் குறுக்கே, உயர் மட்ட பாலம் கட்டும் பணிகளில் இதுவரை, மூன்று பில்லர்கள், இரண்டு பக்கம் சாலையை இணைக்கும் தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டு உள்ளன. கோத்தகிரி மலைப் பகுதியில் பெய்த கனமழையால், வந்த காட்டாறு வெள்ளம், காந்தை ஆற்றில் பில்லர் அமைக்க, தோண்டி வைத்திருந்த மூன்று குழிகளில், சேரும், மண்ணும் நிறைந்தது. மேலும் ஆற்றில் தண்ணீர் தேங்கி நின்றதால், பணிகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது பவானிசாகர் அணையில் நீர்மட்டம், 74 அடியாக தண்ணீர் குறைந்துள்ளது. அதனால், காந்தை ஆற்றின் மையப்பகுதியில், மூன்று பில்லர்கள் கட்டும் பணிகள், துரிதமாக செய்யவும், புதிதாக சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.