வாக்கிங் வந்த கொம்பன் : ஓட்டம் பிடித்த மக்கள்
பந்தலுார்,; பந்தலுார் அருகே முக்கட்டி பகுதியில் சாலையில் 'வாக்கிங்' வந்த கொம்பன் யானையால், சாலையில் வந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். பந்தலுார் அருகே முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் பிதர்காடு வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக, கொம்பன் யானை ஒன்று தனியாக உலா வருகிறது.பகல் நேரங்களிலும் இந்த யானை மக்கள் நடந்து செல்லும் சாலைகளில் உலா வருவதால், பாதசாரிகளும் வாகன ஓட்டுனர்களும் அச்சத்துடன் சாலைகளை கடக்கும் நிலை தொடர்கிறது. நேற்று முன்தினம் பகல் நேரத்தில், பெண்ணை பழங்குடியின கிராமத்திற்கும், அரசுப் பள்ளிக்கும் செல்லும் சாலையில் யானை நின்றதால் மாணவர்களும், பொது மக்களும் சாலையை கடக்க முடியாமல் சிரமப்பட்டனர். பிதர்காடு வனத்துறையினர் அங்கு சென்று யானையை வன பகுதிக்குள் துரத்தினர். இந்நிலையில் மாலை 5:00 -மணிக்கு முக்கட்டி சாலையோர புதரில் இருந்து வெளியே வந்த கொம்பன், நெடுஞ்சாலையில் நடந்து சென்றது. திடீரென யானை சாலையில் நடந்து வருவதை பார்த்த பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்த வனக்குழுவினர் அங்கு சென்று யானையை கிராமத்தில் இருந்து புதர் பகுதிக்குள் துரத்தினர்.மக்கள் கூறுகையில்,' இந்த யானை பகல் நேரங்களில் உலா வருவதால், மக்களை; வாகனங்களை தாக்க வாய்ப்புள்ளது. வனத்துறை நடவடிக்கை எடுத்து, யானையை அடர்ந்து வனப்பகுதிக்குள் துரத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.