கூடலுார்: கூடலுார் வனக்கோட்டத்தில், கோடையில் வனத்தீ பரவலை தடுக்கும் விதமாக, வனப்பகுதியில், 590 கி.மீ., துாரம் தீ தடுப்பு கோடு அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கூடலுார் வனக்கோட்டத்தில் பனி பொழிவு மற்றும் கோடையில் வறட்சியின் தாக்கம் அதிகரிக்கும். இதனால், வனவிலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இடம் பெயரும். கோடை வறட்சியில் வனத்தீ அபாயமும் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், நடப்பாண்டு, பனிப்பொழிவு மற்றும் கோடை வறட்சியில் வனத்தீ பரவாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை பணியாக வனத்துறையினர், 590 கி.மீ., துாரம் தீ தடுப்பு கோடு அமைக்கும் பணியை துவங்கியுள்ளனர். இப்பணிக்காக 'நபார்டு' திட்டத்தின் கீழ், 75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கூடலுார் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறுகையில், ''கூடலுார் பகுதியில், கோடை வறட்சியில் வனத்தீ ஏற்பட்டால், அவை மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்க தீ தடுப்பு கோடு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, வனப்பகுதியின் உட்பகுதியில், 3 மீட்டர் அகலத்தில் 500 கி.மீ., துாரம்; வன எல்லைகளில், 6 மீட்டர் அகலத்தில் 70 கி.மீ., துாரம்; மாநில வன எல்லைகளில், 12 மீட்டர் அகலத்தில், 20 கி.மீ., துாரம் தீ தடுப்பு கோடு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோடை வறட்சிக்கு முன் இப்பணிகள் நிறைவுபெறும். கோடையில் வனத்தீயை கண்காணிக்கவும், அதனை தடுக்கவும் தற்காலிக தீ தடுப்பு ஊழியர்கள் நியமிக்கப்படுவர்,'' என்றார்.