ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் காலநிலையில் ஏற்பட்ட மாற்றத்தால், காட்டு குப்பை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குந்தா நீரேற்று திட்ட பணி தொய்வு ஏற்பட்டுள்ளது. ஊட்டி அருகே காட்டு குப்பை பகுதியில், 1,850 கோடி ரூபாயில், 4 பிரிவுகளில் தலா,125 மெகாவாட் வீதம், 500 மெகாவாட் உற்பத்திக்கான, குந்தா நீரேற்று மின் திட்ட பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. அதில், 2 கி.மீ., துாரம் சுரங்கப்பாதை அமைக்கும் பணி முடிந்து கட்டுமான பணிகள் மற்றும் மின் சாதனங்கள் பொருத்துவது உள்ளிட்ட பணிகள், 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. அவ்வப்போது பெய்யும் மழை காரணமாக இறுதிகட்ட பணிகளை குறிப்பிட்ட நேரத்திற்கு முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முதல் பிரிவுக்கான, 125 மெகாவாட் திட்டப்பணி கடந்த, 2022ம் ஆண்டு முடிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த தாமதம் குறித்து சமீபத்தில் ஆய்வு மேற்கொண்ட உயர் அதிகாரிகள், 'பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்,' என, உத்தரவிட்டனர். இப்பணிக்காக, போர்த்திமந்து , எமரால்டு அணையிலிருந்து, 150 அடி வரை நீர் வெளியேற்ற திட்டமிடப்பட்டு, மதகுகள் வழியாக, 130 அடி வரை நீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு, 'சாரல் மழை, கடும் மேகமூட்டம், கடுங்குளிர்,' என, அசாதாரண சூழல் நிலவுகிறது. இதனால், லாரிகளில் கட்டுமான பொருட்கள், மழையால் மின் உபகரணங்கள் பொருத்து வதில் கால தாமதம், ஆட்கள் பற்றாக்குறையால் பணிகளை விரைவாக மேற்கொள்வதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது.