மாநில எல்லை சோதனை சாவடிகளில் பிளாஸ்டிக் ஆய்வு பணியில் தொய்வு!
நீலகிரி மாவட்டம் முழுவதும், 19 வகையான 'பிளாஸ்டிக்' பொருட்கள் பயன்படுத்த தடை உள்ளது. மேலும், இங்கு சிறிய 'பிளாஸ்டிக்' தண்ணீர் பாட்டில்கள் எடுத்து வருவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டு உள்ளது. சமவெளி பகுதிகளில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வரும், அனைத்து வாகனங்களும், கல்லார் சோதனை சாவடியில், ஆய்வு செய்யப்பட்டு அனுமதிக்கப்படுகிறது. 11 சோதனை சாவடிகளில் ஆய்வு
இதேபோல், நீலகிரி எல்லை பகுதிகளான, கூடலுார் மற்றும் பந்தலுார் தாலுகாவுக்கு உட்பட்ட, 11 சோதனை சாவடிகளில், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு, 'பிளாஸ்டிக்' உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு வருவதை தடுக்கும் பணியில் பல பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.அதில், தமிழக- கேரளா எல்லை பகுதிகளான நாடுகாணி, சோலாடி, தாளூர், நம்பியார் குன்னு, பாட்டவயல் சோதனை சாவடிகளில், பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யும் பணியில் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இங்கு, கேரளா மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும், வாகனங்களை ஆய்வு செய்யும் பணி காலை, 7:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை மட்டுமே நடக்கிறது. இதனால், இரவு முதல் அதிகாலை வரை, தமிழக எல்லைக்குள் வரும் வாகனங்களை ஆய்வு செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. அதிகாலை நேரங்களில் கேரளா மாநில சுற்றுலா பயணிகள் எடுத்து வரும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தாராளமாக, ஊட்டி வரை பயணிக்கிறது. பணியாளர்களிடம் வாக்குவாதம்
மேலும், இந்த பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள் உள்ள பகுதிகளில், போதிய போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லாத நிலையில், கேரளா உள்ளிட்ட வெளி மாநில சுற்றுலா பயணிகள் பரிசோதனையில் ஈடுபடும், பணியாளர்களுடன் அடிக்கடி வாக்கு வாதத்தில் ஈடுபடும் நிலை தொடர்கிறது. இதனால், சில வாகனங்களில் பிளாஸ்டிக் உட்பட்ட பொருட்களை முழுமையாக சோதனை செய்ய முடியாத சூழ்நிலை தொடர்கிறது. கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்ரமணியம் கூறுகையில், ''மாவட்ட நிர்வாகம் அனைத்து சோதனை சாவடிகளிலும், பிளாஸ்டிக் ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள, பணியாளர்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில், சில போலீசாரையும் கண்காணிப்பில் ஈடுபடுத்த வேண்டும். மேலும், இரவு, 7:00 மணி முதல், அதிகாலை 7:00 மணி வரை பிளாஸ்டிக் சோதனை நடத்த, 'ஷிப்ட்' அடிப்படையில் பணியாளர்களை நியமித்தால் மட்டுமே, நீலகிரிக்குள் வரும் தடை செய்யப்பட்டுள்ள 'பிளாஸ்டிக்' பொருட்களை தடுக்க முடியும்,'' என்றார்.
நடவடிக்கை...!
கூடலுார் ஆர்.டி.ஓ., செந்தில்குமார் கூறுகையில், ''மாநில எல்லையில் 'பிளாஸ்டிக்' சோதனை பணியில் ஈடுபடும் பணியா ளர்களில் பாதுகாப்பை உறுதி படுத்தப்படும். மேலும், 11 சோதனை சாவடிகளில், 24 மணிநேரமும் பணியாளர் களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.