கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தை; கூண்டில் சிக்கியதால் மக்கள் நிம்மதி
பந்தலுார்; தமிழக எல்லையில் உள்ள கேரளா கிராமத்தில், கால்நடைகளை கொன்று வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. தமிழக-கேரளா எல்லையில் உள்ள நம்பியார்குன்னு, சீரால் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி உலா வரும் சிறுத்தைகள் பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. அதில், கடந்த சில நாட்களாக, எல்லை பகுதியில், சிறுத்தை ஒன்று, 11 வீடுகளில் இருந்த கால்நடைகளை வேட்டையாடி உள்ளது. அதில், ஆறு ஆடுகள் உயிரிழந்தன. இதனால், 'சிறுத்தையை பிடிக்க வேண்டும்,' என, பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். தொடர்ந்து, கடந்த சில நாட்களாக தமிழக எல்லையில் நம்பியார்குன்னு, சீரால் மற்றும் கேரள பகுதியில் உள்ள கல்லுார் பகுதிகளில் கூண்டுகள் வைக்கப்பட்டு அதனுள் ஆடுகள் கட்டி வைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை கல்லுார் என்ற இடத்தில் கூண்டுக்குள் இருந்த, ஆட்டை பிடிக்க வந்த சிறுத்தை சிக்கி கொண்டது. இதனை பார்த்த மக்கள் வனத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். வனக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தை மற்றும் ஆடு இருந்த கூண்டை, சுல்தான் பத்தேரி குப்பாடி வன விலங்குகள் மீட்பு மையத்திற்கு எடுத்து சென்றனர். ஆடு லேசான காயங்களுடன் மீட்கப்பட்டது. வனத்துறையினர் கூறுகையில், 'பிடிபட்டது மூன்று வயது உடைய ஆண் சிறுத்தை. இது தான் தமிழக, கேரள பகுதிகளில் உலா வந்தது. இதன் உடல் நிலையை பரிசோதனை செய்து, வனவிலங்குகள் மீட்பு மையத்திற்கு கொண்டு செல்வதா அல்லது வனப்பகுதியில் விடுவிப்பதா என்பது குறித்து முடிவு செய்யப்படும்,' என்றனர். மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். பந்தலுார் அருகே மாநில எல்லையில் உள்ள நரிக்கொல்லி பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்டு நடமாடிய மற்றொரு சிறுத்தை தமிழக வனத்துறையினரின் வலையில் சிக்கியது.அதனை முதுமலை தெப்பக்காடு வனப்பகுதியில் விடுவித்தனர்.