| ADDED : ஜன 24, 2024 11:51 PM
ஊட்டி : ஊட்டியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ், மாவட்ட பணிக்குழு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு கலெக்டர் அருணா தலைமை வகித்து பேசியதாவது:தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம், ஊரக தொழில்களை மேம்படுத்தி, வேலை வாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழி ஏற்படுத்த, 35 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுவருகிறது.இத்திட்டத்தில், ஏற்கனவே தொழில் செய்து வருபவர்கள், புதிதாக தொழில் தொடங்கும் சுய உதவி குழு சார்ந்த தொழில் முனைவோரை கண்டறிந்து, வணிக திட்டம் தயாரித்தல் போன்ற ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.மேலும், மகளிர் வாழ்வாதார சேவை மையம் மூலமாக, தொழில் திறன் அடிப்படையில், இணை மானிய நிதித்திட்டம் வாயிலாக, 30 சதவீதம் மானியத்துடன் கூடிய, வங்கி கடன் பெற்றுத் தரப்படுகிறது.வட்டார மற்றும் மாவட்ட தேர்வு குழு மூலமாக, தொழில் முனைவோருக்கு கலந்தாய்வு நடத்தி, தகுதியுள்ள நபர்களுக்கு வங்கி கடன் வழங்க பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவ்வாறு கலெக்டர் பேசினார்.தொடர்ந்து, ஏழு பயனாளிகளிடம் தொழில் குறித்து நேர்காணல் நடத்தினார். இதில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவுசிக், வாழ்ந்து காட்டுவோம் திட்ட உதவி இயக்குனர் ரமேஷ் கிருஷ்ணன் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சசிகுமார் சக்கரபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.