உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோடையை சமாளிக்கலாம்!

கோடையை சமாளிக்கலாம்!

குன்னுார்:கோடையில் ஏற்படும் வறட்சியால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க, குன்னுார் ரேலியா அணை முழு கொள்ளளவுடன் நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட, 30 வார்டுகளுக்கு, ரேலியா அணை மற்றும் ஜிம்கானா, கரன்சி, பந்துமை, பாரஸ்ட்டேல் தடுப்பணைகளில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து 'கிரேஸ் ஹில்' நிலைய தொட்டிகளில் சுத்திகரிப்பு செய்து, மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.கடந்த பல ஆண்டுகளாக, கோடை காலங்களில், குன்னுார் நகரில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடியது. அதில், ஒரு குடம் தண்ணீர், 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் அவலம் ஏற்பட்டது.

எமரால்டு கூட்டு குடிநீர் திட்டம்

இந்நிலையில், குடிநீர் தட்டுப்பாடுக்கு தீர்வு காண, கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, 100 கோடி ரூபாய் மதிப்பில் எமரால்டு கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. குன்னுார் நகரில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் திட்டத்திற்கு தங்களது பங்களிப்புடன், வெலிங்டன் ராணுவ மையம், பாஸ்டியர் நிறுவனமும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற்று வருகின்றன. ஏற்கனவே, குன்னுார் நகராட்சியில் மாதத்திற்கு, 3 அல்லது 4 முறை மட்டுமே குடிநீர் வழங்கப்பட்ட நிலையில், தற்போது இத்திட்டம் செயல்படுத்தப்பட்டதால், 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது.வார்டுகளுக்கு ஒரு நாளைக்கு சராசரி, 26 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் நிலையில் எமரால்டு நீர் மற்றும் கரன்சி உள்ளிட்ட தடுப்பணைகளில் இருந்து எடுக்கப்படும் நீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இதனால், ரேலியா அணை, ஜிம்கானா உள்ளிட்ட சில நீர் ஆதாரங்களில் இருந்து நீர் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.வரும் கோடைகாலத்தில் ஏற்படும் வறட்சியால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

முழு கொள்ளளவு

அதிகாரிகள் கூறுகையில், 'கடந்த சில மாதங்களாக தொடர் மழையின் காரணமாக, 43.6 அடி உயரம் கொண்ட ரேலியா அணை நிரம்பி நீர் வெளியேறியது. தற்போது, 43 அடிக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால், எமரால்டு கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும் போதும், எமரால்டு அணையில் வறட்சி ஏற்படும் போதும், ரேலியா அணை, ஜிம்கானா உள்ளிட்ட தடுப்பணைகளில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படும்,' என்றனர். முழு கொள்ளளவில் குன்னுார் ரேலியா அணைகுடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்க ஏற்பாடு

புது பொலிவு

குன்னுார் ரேலியா அணை பகுதியில், நகராட்சி குடிநீர் பிரிவு சார்பில் பயனற்று கிடந்த தடுப்பு வேலிகள் மற்றும் தகரங்களை கொண்டு அணையை சுற்றிலும் உள்ளே யாரும் வராத வகையில் தடுப்புகள் ஏற்படுத்தி 'கேட்' அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அணை பகுதிகள் சுண்ணாம்பு அடித்துள்ளதுடன், 'வாட்ச்மேன்' குடியிருப்பும் பொலிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் சுற்றுலா பயணிகள்; உள்ளூர் மக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை