நுாலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. மாதிரி தேர்வு
பந்தலுார்: பந்தலுார் நுாலகத்தில் மாவட்டத்தில் முதல் முறையாக, டி.என்.பி.எஸ்.சி., மாதிரி தேர்வு நடத்தப்பட்டது. பந்தலுார் நுாலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், நுாலகர் நித்திய கல்யாணி வரவேற்றார். மாவட்ட நுாலக அலுவலர் கிளமென்ட் தலைமை வகித்து பேசுகையில்,‘‘கடந்த காலங்களில் செய்தி தாள்கள் மற்றும் கதை மற்றும் வரலாற்று புத்தகங்கள் மட்டுமே படிப்பதற்கான இடமாக இருந்த நுாலகம் தற்போது, வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் போட்டி தேர்வர்களுக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் வழிகாட்டி மையமாக மாறி வருகிறது. பந்தலுார் நுாலகத்தில் படித்த, 15க்கும் மேற்பட்டோர் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு பணியாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளது இதற்கு சாட்சியாக உள்ளது. கரூர் நுாலகத்தில் இது போன்ற மாதிரி தேர்வு நடைபெற்ற நிலையில், தற்போது நீலகிரியில் முதல் முறையாக பந்தலுார் உலகத்தில் மாதிரி தேர்வு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது,’’ என்றார். தொடர்ந்து, முதுநிலை வருவாய் ஆய்வாளர் ரேகா, தேர்வர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசுகையில், ‘‘வினா தாள்களை படித்து, முதலில் தெரிந்த விடைகளை பூர்த்தி செய்யவும், அதை தொடர்ந்து மனதில் பதிந்த வினாக்களுக்கான பதிவுகளை நினைவிற்கு கொண்டுவந்து, பதிவு செய்ய வேண்டும். அனைத்து வினாக்களுக்கும் விடை அளிப்பது முக்கியம் ஆகும்,’’ என்றார். மாதிரி தேர்வுக்கான வினா விடைகளை தயார் செய்து கொடுத்த கரூர் மாவட்ட நுாலக அலுவலர் சிவகுமாருக்கு, நுாலகர் அறிவழகன் நன்றி தெரிவித்து,’’ பேசினார். தொடர்ந்து தேர்வு நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில், இன்ஸ்பெக்டர் சந்திரசீலன், தலைமையிட துணை தாசில்தார் பொன்னரசு, வாசகர் வட்ட தலைவர் முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினர். 13 தேர்வர்கள் மாதிரி தேர்வு எழுதினர்.