சாலையோரம் வீசப்படும் மது பாட்டில்கள்; சுற்றுலா பயணிகளால் சூழலுக்கு ஆபத்து
கூடலுார்; 'கூடலுார் கோழிக்கோடு சாலையோரம் காலி பாட்டில்களை வீசி செல்வதை தடுக்க, கண்காணிப்பு பணியை தீவிர படுத்த வேண்டும்,' என, வலியுறுத்தியுள்ளனர். 'கூடலுார் பாண்டியார் குடோன் அருகே, கோழிக்கோடு சாலையோரம் வாகனங்களை நிறுத்த கூடாது,' என, வனத்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். இந்நிலையில், அதனை ஒட்டிய சிமென்ட் தடுப்பு பகுதியில் நேற்று முன்தினம், இரவு சிலர் அமர்ந்து, மது குடித்துவிட்டு காலி மது பாட்டில்கள், சாலையோரம் வீசி சென்றுள்ளனர். சாலையோரத்தில் மது பாட்டில்களை இருப்பதை பார்த்து அவ்வழியாக சென்ற மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், 'கேரளாவில் இருந்து கூடலுார் வழியாக நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களில் சிலர், சாலையோரம் அமர்ந்து மது குடித்துவிட்டு பாட்டில்களை சாலையோரம் வனப்பகுதியில் வீசி செல்கின்றனர். இதனால், வனச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், 'பார்க்கிங்' தடை செய்யப்பட்ட, சாலையோரம் அமர்ந்து மது குடித்துவிட்டு காலி பாட்டில்களை சாலையில் வீசி சென்றுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுபோன்ற செயல்களை தடுக்க, இரவு நேரத்தில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிர படுத்த வேண்டும்,'என்றனர்.