உலகின் சிறந்த விஞ்ஞானி பட்டியல்; தொழிலாளியின் மகனுக்கு கவுரவம்
பந்தலுார்: பந்தலுார் பகுதியை சேர்ந்த எஸ்டேட் தொழிலாளியின் மகன், உலகின் சிறந்த விஞ்ஞானி விருது பட்டியலில் இடம் பிடித்துள்ளார். பந்தலுார் அருகே அத்திக்குன்னா எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர்கள் வீரமுத்து ராமாயி. இவர்களின் மகன் அசோக்குமார். இவர் உள்ளூர் அரசு பள்ளிகள் மற்றும் அரசு கல்லுாரியில் படித்து, பேராசிரியராக பணிபுரிந்து, பின்னர் அறிவியல் ஆராய்ச்சி துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது, சென்னை சவீதா பல்கலைக்கழகத்தின் கழிவு மேலாண்மை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையத்தின் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். அத்துடன், 'மைக்ரோ-ஆல்கே' அடிப்படையிலான சுத்தமான எரிசக்தி மற்றும் உயிரி வழி பொருட்கள் கண்டுபிடித்தல்; ஆராய்ச்சி செய்வதில் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில், 'பயோ பிளாஸ்டிக்' தயாரிப்பு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார். இதன் மூலம் உணவுக்கழிவு, ஆகாயத்தாமரை மற்றும் திரவ கழிவு நீரை பயன்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான முறையிலான 'பயோ பிளாஸ்டிக்' உருவாக்கி உள்ளார். இந்நிலையில், 'இயற்கையை பாதுகாக்கும் வகையிலான பயோ பிளாஸ்டிக் கண்டுபிடிக்கும் இவரின் முயற்சிகளுக்காக, தென் கொரியாவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும், 'நேஷனல் ரிசர்ச் பவுண்டேஷன்' சார்பில்,'விஸிடிங் குளோபல் சயின்டிஸ்ட்' என்ற விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். ஏற்கனவே இந்த நிறுவனம் சார்பில் மாற்று எரிசக்தி கண்டுபிடித்ததற்கான இரண்டு முறை உலக சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் பெயர் பெற்றுள்ள நிலையில், மூன்றாவது முறையாக இந்த பட்டியலில் இவர் இடம் பெற்றுள்ளார். விஞ்ஞானி அசோக்குமார் கூறுகையில்,'' ஒரு சிறிய எஸ்டேட் பகுதியில் பிறந்து வளர்ந்து அங்கு படித்து, தற்போது சென்னை மட்டுமின்றி, தாய்லாந்தின் சுல்லாங்கோர்ன் பல்கலைக்கழகம், மலேசியாவின் யுனிவர்சிட்டி டெக்னாலஜி மலேசியா, தென்கொரியா பல்கலைக்கழகங்களில் கெஸ்ட் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறேன். கிராம பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள், அறிவியல் ஆராய்ச்சி துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளேன்,'' என்றார்.