விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்தில் கடனுதவி
ஊட்டி: நில உடமை திட்டத்தில் விவசாய நிலம் வாங்குவதற்கு, மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது.தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக (தாட்கோ) நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தின் கீழ், விவசாய தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையிலான திட்டம் உள்ளது. அதில், நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் கிரையம் தொகையை, 'இந்தியன் ஓவர்சீஸ்' வங்கி மூலமாக, குறைந்த வட்டியில் கடனாக பெற்று வழங்கப்படும்.நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு, அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பீட்டின் படி, திட்ட தொகையில், 50 சதவீதம் அல்லது அதிகபட்சம், ஐந்து லட்சம் ரூபாய் வரை மானியம் விடுவிக்கப்படுகிறது. திட்டத்தில் வாங்கப்படும் நிலங்களுக்கு, 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது.தற்போது, பயனாளிகள் பங்குத்தொகை இல்லாமல் மானிய தொகை போக, எஞ்சிய கிரையம் தொகையை தேசிய பட்டியல் இனத்தோர் நிதி மேம்பாட்டு கழக நிதியில் இருந்து, பயனாளிகளுக்கு ஆறு சதவீத வட்டியில், வங்கி மூலம் கடனாக பெற்று நிலம் வாங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள், இணையதளத்தில், www.tahdco.comஎன்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று, உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.