உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஏமாற்றும் நபர்களை உள்ளூர் மக்கள் நம்ப வேண்டாம்!

ஏமாற்றும் நபர்களை உள்ளூர் மக்கள் நம்ப வேண்டாம்!

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில், நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் கட்டட அனுமதிக்கு மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட மூன்று குழுவினர் பரிசீலனைக்கு பின், அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், மாவட்டத்தில் உள்ள விளை நிலங்களை அழித்து, அனுமதியற்ற முறையில் மனைப்பிரிவுகள் உருவாக்கி விற்பனை செய்யப்படும் இடங்கள் குறித்தும் உள்ளாட்சி அமைப்புகள் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. மூன்று துறைகள் அனுமதி அவசியம் ஒருவர் முறையாக கட்டட அனுமதி பெற வேண்டும் எனில், மாவட்ட அளவிலான கட்டடக்குழு விற்கு விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின், வனம், கனிமவளம், வேளாண் பொறியியல் துறைகளில் பரிசீலிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் முறையாக இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. கடந்த மூன்றாண்டுகளில் மட்டும், 1,400 விண்ணப்பங்கள் மாவட்ட கட்டட குழுவின் சார்பில், ஆரம்பநிலையில் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதிகாரிகள் கூறுகையில், 'மாஸ்டர் பிளான்' சட்ட விதிகளின் படி, முறையான அனுமதி ஏதும் பெறப்படாமல் உள்ள மனைப்பிரிவுகளில் பொதுமக்கள் யாரும் மனைகளை வாங்கி ஏமாற வேண்டாம். எந்த இடத்தை வாங்கினாலும், முறையான கட்டட அனுமதி பெறப்பட்ட பின், கட்டட பணி துவக்கப்பட வேண்டும். விதிமுறைக்கு மாறாக கட்டட பணிகளில் பொறியாளர்களும் ஈடுபட கூடாது,' என்றனர். கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில்,''நீலகிரியின் சுற்றுச்சூழலை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களில், ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 'சீல்' வைக்கும் பணிகள் நடந்து வருகிறது. கட்டட அனுமதியை பொறுத்தவரை, மூன்று துறைகளின் ஆய்விலும் விண்ணப்பங்கள் சரியாக இருக்கணும். மூன்று துறைகளில் ஏதாவது ஒரு துறையில் நிராகரித்தாலும் அனுமதி வழங்க முடியாது. எந்த சிபாரிசு வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. ஒரு சிலர் மாவட்ட நிர்வாகத்தை அணுகி அனுமதி பெற்று தருகிறோம் என கூறி மக்களை ஏமாற்றி வருவதாக, புகார்கள் வருகின்றன. அத்தகைய நபர்களை யாரும் நம்ப வேண்டாம். மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை