லாரி கவிழ்ந்து விபத்து; ஓட்டுனர்கள் அதிருப்தி
கூடலுார்; தமிழக- கேரளா எல்லையான நாடுகாணியில், கேரளா நோக்கி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.கர்நாடக மாநில குண்டல்பேட் பகுதியில் இருந்து, தென்னை நார் கழிவுகள் ஏற்றிய லாரி நேற்று, அதிகாலை, 5:00 மணிக்கு கூடலுார் நாடுகாணியை கடந்து கேரளா நோக்கி சென்றது. தமிழக-கேரளா எல்லையான அண்ணாநகர் அருகே, லாரி கட்டுப்பட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஓட்டுனர்,சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.ஓட்டுனர்கள் கூறுகையில், 'தமிழக, கேரளா, கர்நாடகாவை இணைக்கும் இச்சாலை, பல இடங்களில் சேதமடைந்து சீரமைக்கப்படாமல் உள்ளது. இதில், வாகனங்கள் சிக்கி விபத்துக்குள்ளாகிறது. லாரியும், சேதமடைந்த வளைவான சாலையை கடக்க முயன்ற போது, கவிழ்ந்தது. மீண்டும், இது போன்ற விபத்துகளை தவிர்க்க, சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்,' என்றனர்.