கேத்தியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்; இளைஞர்கள் பங்கேற்று பயன்பெற அழைப்பு
ஊட்டி ; கேத்தியில் நடக்கும் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மகளிர் திட்டம் இணைந்து நடத்தும், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 23ம் தேதி கேத்தி சி.எஸ்.ஐ., பொறியியல் கல்லுாரியில் நடக்க உள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் சென்னை,கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு தங்கள் நிறுவனங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். முகாமில், '8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு தேர்ச்சி; பட்டதாரிகள், பட்டய படிப்பு படித்தவர்கள்; ஐ.டி.ஐ., கணினி இயக்குபவர்கள், ஓட்டுனர்கள்,' என, அனைத்து விதமான பணிகளுக்கு தகுதி உள்ளவர்கள் பங்கேற்கலாம். இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். எனவே, நீலகிரியை சேர்ந்த இளைஞர்கள்; பெண்கள் அனைவரும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடைய வேண்டும். முகாம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் துறையில் பணிக்கு செல்பவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. விருப்பம் உள்ளவர்கள், tnprivatejobs.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.