நுண் உரம் செயலாக்க ஆய்வு
ஊட்டி : ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட, பழைய ஊட்டி நுண்உரம் செயலாக்க மையம், காந்தள் வளம் மீட்பு மையம் மற்றும் தீட்டுக்கல் உரக் கிடங்கு ஆகிய பகுதிகளில் நடந்து வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை, கலெக்டர் லட்சுமி பல்யா ஆய்வு செய்தார்.இந்த ஆய்வில், நகராட்சிக்கு உட்பட்ட, 36 வார்டுகளில் வசிக்கும் பொது மக்களிடம் இருந்தும், வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் இருந்து எவ்வாறு குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. அந்த குப்பைகளை செயலாக்கம் செய்து அப்புறப்படுத்துவது குறித்தும் நகராட்சி அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.மேலும், 'குறித்த நேரத்தில் வீடு, வீடாக சென்று, குப்பைகளை வாகனங்கள் மூலம் பெற வேண்டும்; வணிக வளாகங்கள், கடைகள் மற்றும் வீடுகளில் இருந்து வாங்கும் குப்பைகளை, மட்கும்; மட்காத குப்பை என தரம் பிரித்து வழங்க, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்டத்தில், சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் மையங்களில் குப்பைத் தொட்டிகள் வைக்க முன்னுரிமை அளிப்பதுடன், சுற்றுப்புறத்தை துாய்மையாக வைக்க வேண்டும்,' என, அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.