உறுப்பினர்கள் பாதிப்பு! தொழிற்சாலையில் ஆறு மாதமாக ரூ.70 லட்சம் நிலுவை:கடும் பொருளாதார நெருக்கடியில் விவசாய குடும்பங்கள்
பந்தலுார்: பந்தலுாரில் நல்ல நிலையில் செயல்பட்டு வந்த, கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை கடன் சுமையில் சிக்கி, ஆறு மாதமாக உறுப்பினர்களுக்கு, 70 லட்சம் ரூபாய் வரை நிலுவை தொகை வழங்கப்படாமல் உள்ளதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், 'இன்கோ சர்வ்' சார்பில், 13 தேயிலை தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. கடந்த, 1965ம் ஆண்டில் அமைக்கப்பட்ட தொழிற்சாலைகளில், சிறு தேயிலை விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில், பந்தலுாரில் செயல்படும், 'மிஸ்ட் வேலி' கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் கடந்த காலத்தில், 1,533 உறுப்பினர்கள் இருந்தனர். தற்போது, 1,200 சிறு விவசாயிகள் உறுப்பினர்களாக இருந்து கொண்டு நாள் தோறும், 20 ஆயிரம் கிலோ பசுந்தேலையை வினியோகம் செய்து வருகின்றனர். இதனை கொண்டு தேயிலை துாள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடன் பெற்று நவீன மயம் இந்த தொழிற்சாலையை மேம்படுத்தும் வகையில், கடன் பெற்று நவீனமயமாக்கிய நிலையில், தேயிலை துாள் விற்பனை பணத்தில், கடனை செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதனால், மாதத்திற்கு, 20 ஆயிரம் கிலோ பசுந்தேயிலை மட்டுமே கொள்முதல் செய்யும் நிலைக்கு மாறியதுடன், கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்கு, பணம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் முதல் நடப்பு மாதம் வரை உறுப்பினர்கள் வினியோகிக்கும் இலைக்கு பணம் கொடுக்காத நிலையில், விவசாயிகள் படிப்படியாக தனியார் தேயிலை தொழிற்சாலைகளை நாடி வருகின்றனர். இதனால், வாரத்தில் சில நாட்கள் மட்டும் தேயிலை துாள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களும் பாதிக் கப்பட்டுள்ளனர். மறுபுறம் தொழிற்சாலையில் பணியாற்றும் அலுவலர்கள், தினசரி பணிக்கு வரும் நிலையில் அவர்களுக்கான சம்பளம் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதே நிலை தொடர்ந்தால், பழமையான இந்த தொழிற்சாலை விரைவில் மூடப்படும் அபாயம் ஏற்படும்.சி.ஐ.டி.யு., நிர்வாகி ரமேஷ் கூறுகையில்,''பல லட்ச ரூபாய் லாபம் ஈட்டி வந்த இந்த தேயிலை தொழிற்சாலை, தற்போது சுமார், 10 கோடி ரூபாய் அளவிற்கு கடன் சுமையில் சிக்கியுள்ளது. மேலும், இங்குள்ள உறுப்பினர்களுக்கு, ஆறு மாதமாக, 70 லட்சம் ரூபாய் வரை நிலுவை தொகை உள்ளதால், அவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதே நேரம் தொழிற்சாலை ஊழியர்களுக்கு மட்டும் சம்பளம் மாதந்தோறும் வழங்கப்படுவதால், வருவாய் இல்லாமல் செலவினம் அதிகரித்து வருகிறது. இது குறித்து அரசு அதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார். கூடலுார் ஆர்.டி.ஓ., குணசேகரன் கூறுகையில்,''பந்தலுார் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் நிலவும் பிரச்னைகள் குறித்து, தொழிலாளர்கள் அல்லது தொழிற்சாலை உறுப்பினர்கள் புகார் அளித்தால், நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.